மத சுதந்திரம் அளிப்பதாகக்கூறி அரசியல் சட்டம் சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆகவே அரசியல் சட்டம் ஒழிக்கப்பட்டாக வேண்டுமென 1957 நவம்பர் 26 ஆம் தேதி அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் அறிவித்தார். போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசியல் சட்டம், தேசியக்கொடி, காந்தி படம் ஆகியவற்றை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் தண்டனை என இந்தியாவிலேயே முதன்முதலாக தேசிய அவமதிப்பு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசாங்கம் இயற்றியது.
தடைச்சட்டத்தையும் மீறி 10 ஆயிரம் பேர் அரசியல் சட்டத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முதியோர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
சிறைக்கொடுமையால் சிறைக்குள் 5 பேரும் வெளியில் 13 பேரும் இறந்தது கொடிய வரலாறு. இறந்த வீரரின் உடல் சிறைக்குள்ளேயே புதைத்தபோது, அமைச்சரிடம் போராடி உடலைத் தோண்டி எடுத்து ஊர்வலமாக இறுதி மரியாதை செய்தது நெகிழ்ச்சியான நிகழ்வு
• மூன்று ஆண்டுகள் வரை தண்டனை பெற்று சிறையில் கொடுமைக்குள்ளான போராளிகளின் அனுபவங்கள்.
• சிறையினுள் இருக்கும்போது தங்கள் தாய், தந்தை மற்றும் உறவுகள் இறந்தபோதும் கலங்காத நெஞ்சுறுதி.
• நிறைமாத கர்ப்பிணியாக சிறை சென்று அங்கு குழந்தையை ஈன்றெடுத்த வீரத்தாயின் அசைக்க முடியாத உறுதி-தெளிவு.
• இந்தியத் துணைக்கண்டத்தில் எங்கும் நிகழ்ந்திராத, காலத்தால் அழியாத அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை நடத்திய பெரியார் இயக்கத்தின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் விரிவான பதிவாக இந்நூல் வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.