பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலம் எனப்படுகிறது. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியத்தில் முன்னோடி முயற்சியாக, படிமம், குறியீடு, புனைவியம், யதார்த்தவியம், நவீனத்துவம், போன்றவற்றை உள்ளடக்கிய பல பரீட்சார்த்தமான படைப்புகள் படைக்கப்பட்டன. கதை, கவிதை, உரைநடை, புதினம், நாடகம் அனைத்தும் புது வடிவம் பெற்றுப் பெரும்பாய்ச்சல் பாய்ந்தன. அக்காலத்தில்தான் ரஷ்ய இலக்கியம் குறுகிய அரசியல் சித்தாந்தங்களிலிருந்து விடுபட்டு, பரந்துபட்ட சமூக வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கியது. காதல், காமம், துரோகம், சீற்றம், தனிமை, மரணம், தோல்வி, தற்கொலை, போர், புரட்சி, அமைதி என தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த வாழ்வைப் பேசியது. அந்நாளைய ரஷ்ய சமூகத்தின் அடுக்குநிலைகளையும் அவற்றின் ஏற்றத் தாழ்வுகளையும், தொழிலாளர் வர்க்கத்தையும், விளிம்புநிலை மானுடரையும், மனித மனங்களின் விநோதங்களையும், வாழ்வியல் இன்னல்களையும் எவ்விதப் பாசாங்குமின்றி வெளிப்படுத்தியது. போர்களின் கொடூர விளைவுகளைக் கண்முன் நிறுத்தியது. வாழ்க்கைத் துயரங்களைச் சொல்லும் அதே சமயம் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளையும் கோடிட்டுக் காட்டியது. ரஷ்ய செவ்வியல் இலக்கியங்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு அதன் வாசகப்பரப்பு விரிவடைந்தது. அதன் தொடர்ச்சியாய், ரஷ்ய இலக்கியப் பொற்காலத்தின் நீட்சியாய் இத்தொகுப்பு கனலி பதிப்பகம் வாயிலாக தற்போது வெளியாகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளுமைகளான ஆன்டன் செகாவ், மக்ஸிம் கார்க்கி, லியோ டால்ஸ்டாய், செவோலோட் கார்ஷன், மிஹயீல் அர்ஸிபாஷேவ், ஜினைடா கிப்பியஸ், அலெக்ஸாந்தர் குப்ரின், அலெக்ஸாந்தர் புஷ்கின், ஃபியோதர் சோலோகப், விளாதிமீர் நபகோவ் ஆகியோரின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Be the first to rate this book.