உலகின் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை இலக்கியங்களில் ஒமர் கய்யாமின் ருபாயியத்தும் ஒன்று. கீழை நாடுகளின் தத்துவம், கவிதை, அறிவியல் ஆகியவற்றின் விளைச்சலாகக் கருதப்படும் ருபாயியத், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ருபாயியத் மது, மாது போன்ற இன்பங்களில் திளைக்கச் சொல்கிறது என்று ஒரு சாராரும் ருபாயியத்தில் இடம்பெற்றிருக்கும் மது, கோப்பை, மதுவிடுதி போன்ற சொற்கள் உண்மையில் ஆன்மீகரீதியில் பார்க்கப்பட வேண்டியவை என்று இன்னொரு சாராரும் கருதுகின்றனர்.
படைப்பின் துவக்கம், கோள்கள்-பிரபஞ்சம் போன்றவற்றின் சக்தியற்ற நிலை, வாழ்வின் நிலையற்ற தன்மை என்று ருபாயியத் சொல்லும் விஷயங்கள் ஒமர் கய்யாமுக்கு முன்னும் பின்னும் பலராலும் சொல்லப்பட்டிருந்தாலும் தனக்கே உரிய கவித்துவத்தாலும் தரிசனத்தாலும் ஒமர் கய்யாம் பிறருடன் வேறுபடுகிறார். நிலையாமையைப் பற்றி உக்கிரமாகச் சொல்லும் அதே வேளையில் இந்தக் கணத்தின் மதிப்பைப் பற்றியும், வாழ்வின் இந்தக் கணத்தை அனுபவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் கவித்துவத்தோடு சொல்வதுதான் ருபாயியத்தின் சிறப்பு. பாரசீக மூலத்துக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றிலிருந்து ருபாயியத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
Be the first to rate this book.