ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட!
சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது.
அன்புமயமானவர். அளப்பரிய சாதனையாளர். எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர். முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர். திட்டம் தீட்டுவதில் தன்னிகரற்றவர். ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இப்படி ராக்ஃபெல்லரைப் பாராட்டுபவர்கள் ஒரு பக்கம்.
வெற்றிக்காக எந்தவொரு குறுக்குவழியையும் நாடத் தயாராக இருப்பவர். எதிரிகளைத் திட்டமிட்டு ஒழிப்பதில் கெட்டிக்காரர். அரசாங்கத்தை ஏமாற்றும் வித்தைகள் அனைத்தும் கைவரப் பெற்றவர். ஈவு, இரக்கம் என்பதே இவருடைய அகராதியில் கிடையாது. இப்படி ராக்ஃபெல்லரை விமரிசிப்பவர்கள் இன்னொரு பக்கம்.
பாராட்டுகளும் விமரிசனங்களும் ராக்ஃபெல்லரின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. ஆனால் இரண்டையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவருடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். வெற்றி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரும்மாண்டமான வெற்றி. எதிரிகள் அத்தனைபேரையும் அண்ணாந்து பார்க்கச் செய்யும் வகையில் தன்னுடைய வெற்றி இருக்கவேண்டும் என்பார் ராக்ஃபெல்லர்.
அதைச் சாதிப்பதில்தான் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தினார்.
வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் என்று சொன்ன ராக்ஃபெல்லர், அந்தப் போட்டியில் தான் மட்டுமே வெல்லவேண்டும், தன்னுடைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதில் அசாத்திய பிடிவாதம் காட்டினார். அந்த வெற்றியை உறுதிசெய்ய அவர் செய்த சில காரியங்கள் அச்சமூட்டக்கூடியவை. அதன் காரணமாக அவர் சந்தித்த விமரிசனங்கள் அநேகம்.
அதேசமயம் ராக்ஃபெல்லரின் சில குணங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அரசாங்கம், போட்டியாளர்கள், எதிரிகள் என்று எத்தனை முனைகளில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் சரி. கலங்கமாட்டார். கவலைகொள்ளமாட்டார். மாறாக, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவார். ஒன்று, நிதானம். மற்றொன்று, துணிச்சல். வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் இவை.
Be the first to rate this book.