இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்!
தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.வாங்கிக்கொள்ள மட்டுமல்ல வருடிக் கொடுக்கவும்!
இந்தக் கொடுக்கல் வாங்கலில்தான் உயிர்களும் நெளிகின்றன. எல்லோரும் ஏதோ ஒரு மொழிவழக்கோடு வாழ்ந்தாலும் அவரவருக்கான உயிர்மொழி தனியாகத்தான் இருக்கிறது.வாழ்ந்து தொலைத்ததை நினைத்து ஏங்கியும், நிகழ்வாழ்வில் தட்டுப்படாததைத் தேடியும் மனசுக்குள்ளே புழுங்கிப் புழுங்கிப் புழங்குகிறது.
எல்லோரிடத்திலும் ஒரு கதை! இணையத்தளங்களில் , மின் அஞ்சல், குறுஞ்செய்திகள் , வலைப் பூக்கள் , இணையக்குழுக்கள் , கைபேசி அழைப்புகள் ஃபேஸ்புக்,ட்விட்டர், இன்னும் என்னென்னவோ...
எல்லைகடந்து, எல்லோரிடமும் எப்போதும் ‘எதுவும்’பேச்சாகத்தான் இருக்கிறது.வீட்டிலும், எதிர்வீட்டிலும் பக்கத்துச் சீட்டிலும் வார்த்தை களற்ற மௌனம் தடித்துவிடுகிறது.உலகம் நம் கைப்பிடிக்குள் வந்துவிட்டது.
ஆனால் நமக்கான உலகம் நம்கையை விட்டுப் போய் விட்டது!
ஒவ்வொரு கலைவடிவங்களும் தனக்கான வடிவத்தைத் தாமே தேர்ந்தெடுத்து விடுகின்றன.அப்படி நேர்ந்துவிடுவதைத்தான் ‘நேர்த்தி’ என்கிறோமோ!
எங்கள் ஊர் குசச் செட்டியார், மரத்தச்சன் நெசவாளர், பூட்டு செய்கிறவர், பாம்பாட்டிவித்தைக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர்,அவருக்கான உடையை உருவாக்கியவர், நகை செய்கிறவர்,இவர்களின் கலை நேர்த்திக்கு முன்னால்?
குத்தின ஒரலுக்குப் பஞ்சம் தெரியாது.
Be the first to rate this book.