அந்தக் காலத்தில் வார் வைத்த நிஜாரை அணிந்த சிறுவர்களும், சீட்டி பாவாடை சட்டை அணிந்த சிறுமிகளும், விளையாட்டுகளைத் தொடங்குவதற்கு முன் போட்ட பிள்ளையார் சுழிதான் ரெடி ஜூட். அதைச் சொல்லிவிட்டால், களத்தில் முழு மூச்சுடன் இறங்கிவிட்டாயிற்று என்று எதிராளிக்கு உணர்த்தி விட்டதாகிவிடும். அதன் பின்னால் பின்வாங்க முடியாது என்பது எழுதப்படாத விளையாட்டு விதிகளின் முக்கிய அம்சம் ஆகும். ஜூட் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் சணல் என்றும், ஹிந்தியில் பொய் என்றும் பொருள் இருந்தாலும், விளையாட்டுகளின் சொல் அகராதியில் அது மாறுபட்டு விடுகிறது.
ரெடி ஜூட் விடாமலேயே எப்போதும் தயார் நிலையில் இருப்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும், அது சாத்தியம் ஆகாது. குறிப்பாக, மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டிய அரசாங்க ஊழியர்கள், தயார் நிலையில் இருக்கிறார்களா என்பது பெரிய எழுத்தில் போட வேண்டிய கேள்விக் குறி. அவர்களை ஜூட் சொல்லி நம்முடைய காரியத்தில் இறங்க வைத்துவிடுவது நம் முன்பிறவிப் பாவ புண்ணியங்கள் அல்லது ஈகை குணத்தைப் பொறுத்தது. தயார் நிலையில் ராணுவம் உள்ளது என்றால், எல்லைக் கோட்டில் நின்று நாட்டைக் காக்கும் வீரர்கள் கைகளில் ஆயுதம் ஏந்தியிருந்தாலும், ரெடி ஜூட் என்கிற மேலிட கமாண்டுக்காகக் காத்திருக்கிறார்கள் என்று பொருள். நம் சீரியல்களுக்காகவே வியாசர் அருளிய மகாபாரதத்தை யாராலும் புவ்வாய்ங்ங்... என்று நீண்டு சுருளும் சங்குச் சத்த முழக்கம் இல்லாமல் எடுத்துவிட முடியுமா? முடியாது, அவ்வாறு எடுத்தால் அது எடுபடாது. கபடநாடக சூத்ரதாரியான கண்ணனோ, அம்புப் படுக்கைப் புகழ் பிதாமகர் பீஷ்மரோ, சங்கை எடுத்து ஊதுவதே ரெடி ஜூட் என்கிற அறிவிப்புக்குத்தானே!
சண்டைச் சச்சரவுக்கு மட்டும் அல்லாது, காத்து அருளவும் ரெடி ஜூட் தேவையாகிறது. குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தாயார்தான் தயார் நிலையில் இருப்பார் என்பது தெரிந்ததே. கும்பகோணத்தில் அமைந்த கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள அருள்மிகு மங்களாம்பிகை அம்மன் சிலையைக் கூர்ந்து நோக்கினால், அவரது வலது பாதம் சற்றே முன்னே வைத்து நிற்பது போல் வடிவமைக்கப் பட்டிருக்கும். பக்தர்களின் அறை கூவலைக் கேட்டவுடன் துயர் தீர்க்க, பிஸ்டல் சத்தம் கேட்டவுடன் பாய்ந்து ஓடத் தயாராக இருக்கும் தடகளப் போட்டியாளரைப்போல், விரைய உஷார் நிலையில் இருப்பதாக விளக்கம் சொல்வது உண்டு.
நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. விளையாட்டு போல் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ரெடி ஜூட் சொல்லிவிட்டு ஆரம்பித்த தமாஷா வரிகளின் பத்தி, தற்போது 640 வாரங்களைத் தாண்டி கும்மாள நடை போடுகிறது.
காரணம்? வட்டார ஏடுகளின் ஆசிரியரும், ஓய்வுபெற்ற ஐ. ஏ. எஸ். அதிகாரியுமான கே. எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அளித்து வரும் தாக்கம், ஓவிய விற்பன்னர் நடனம், மெய் வருத்தம் பாராது வாரா வாரம் தீட்டித் தரும் ஓவியங்களும் இ - மெயிலிலும், தொலைபேசியிலும் நேரிலும் புகழ்ந்து தள்ளும் வாசக நல்லுள்ளங்களும், அவசரகதியில் இயங்குவதால் ஏற்படும் சிறிய சறுக்கல்களை உரிமையுடன் சுட்டிக்காட்டி மகிழ்ந்துவிடும் நக்கீரர்களும்தான் என்றால் மிகையாகாது.
இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க மிக்க ஆவலாக இருக்கும் அருமைவாசகராகிய உங்கள் முன்னே மேலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கக்கூடாது. அது மகா தப்பு. ஆகவே, ரெடி ஜூட்!
அன்புடன்,
ஜே.எஸ் ராகவன்
Be the first to rate this book.