ஒப்பீட்டளவில் தமிழ் சினிமா வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. அதனினும் குறிப்பாக 1950கள் வரை. நிறைய படங்கள் அழிந்துவிட்டன. ஆவணங்களும் எளிதில் கிடைக்கவில்லை.மற்றொரு பக்கம் ஆவணங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமா வரலாறு என்பது பண்பாடு,அரசியல்,கலை போன்ற பல துறைகளின் வரலாற்றுப் பரிமாணங்களை உள்ளடக்கியதே. உறைந்த நிகழ்காலத்தை சலனப் படங்களில் உயிரோவியங்களாய் காண்பதுபோல் வேறெதிலும் காணவியலாது.
காளி ரத்னம் நடித்த படங்களின் கிட்டத்தட்ட முழுமையான விவரங்கள் இந்த நூலில் அளிக்கப்பட்டுள்ளன. அவர் நடித்த படங்கள் சான்றுகளுடன் தரப்பட்டுள்ளன. அந்த வகையில், 1950 வரையிலான 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பெருமளவிலான விவரங்கள் இந்த நூலில் அளிக்கப்பட்டுள்ளன. சுவை கூட்டும் பொருட்டு அள்ளித் தெளிக்கவோ, கதையளக்கவோ செய்யாமல், புனைவு நடையில் எழுதாமல் தகவல்களாக மட்டுமே தரப்பட்டுள்ளது. காளி ரத்னம் குடும்பத்தினரின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்த , தரமான மற்றும் துல்லியமான புகைப்படங்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. மேலும், அவை இடம்பெற்ற சில படங்களின் விவரங்கள் முதன்முறையாக ‘துப்பறிந்து’ தரப்பட்டுள்ளது. இதன் விளைவாக சில அழிந்துவிட்ட படங்களின் படக்காட்சிகள் மீளக் கிடைத்திருக்கின்றன. இந்நூல் காளி ரத்தினம் பற்றிய ஒரு முழுமையை நோக்கிய நூலாக உருவாகியிருக்கும் அதே நேரத்தில், அரிய, பெரிய தகவல் மற்றும் ஆவணக் களஞ்சியமாகவும் விளங்கும்படி தொகுக்கப்பட்டுள்ளது.
காலத்தை அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட இந்த அரிய கலைப்புதையல்கள் எதுவுமே என்னுடையதல்ல. இவை, எங்கிருந்து பெறப்பட்டதோ அங்கேயே திருப்பித் தரப்படுகிறது. என்னிடத்தில், அவை தன்னுடைய பயனை அடைந்து சற்று மேன்மை பெற்றுள்ளன. இதுவே, என்னுடைய கைம்மாறு.
- ச. முத்துவேல்
Be the first to rate this book.