கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம்.
விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர்.
கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெருநிலைக்கு முனையும் புத்தத் துறவியைப் போலவும் நள்ளிருள் நிலாவின் மௌன நகர்ச்சியைப் போலவும் சதா காலமும் எண்ணமும் எழுத்துமாக வாழும் பவித்ரன் வண்ணதாசன்.
இவரது உலகில் அன்பு உண்டு. ஆரவாரமில்லை; சமயமும் இல்லை. சமயோசிதமும் இருக்காது.
மரமாய் நிழலாய் கனிந்த மனிதர்களின் வாழ்வும் காட்சியும் காட்சிப்பிழைகளும் கொண்டவை இவரது கவிதைக் கணங்கள்.
‘யாருடனும் போட்டி இல்லை எனக்கு’ என்று இவர் பிரகடனப்படுத்தினாலும் போட்டிப் போட்டுக் கொண்டு இவரிடம் வந்து சேர்கிறார்கள் அடுத்தடுத்த தலைமுறையினர்.
சமீபகாலமாக கதாசிரியர் வண்ணதாசனுடன் கவிஞர் கல்யாண்ஜிக்கும் சரி நிகர் போட்டி ஒன்று நிலவி வருவதும் வெளிப்படையான உண்மை.
தற்போது ஒரே நேரத்தில் வண்ணதாசனின் கமழ்ச்சி சிறுகதைத் தொகுப்பும் கல்யாண்ஜியின் ரணங்களின் மலர்ச்செண்டு கவிதைத் தொகுப்பும் வெளிவருகின்றன.
கமழ்ச்சி நெடுங்கதைகளின் தொகுப்பாகவும் ரணங்களின் மலர்ச்செண்டு கல்யாண்ஜியின் மொத்த வாழ்வனுபவத்தின் திரட்சியாகவும் மனம் கடந்த நிலையில் வந்திறங்கிய வார்த்தைகளாகவும் நம்மைச் சலனப்படுத்துகின்றன. ‘சுந்தரன் நான் எனும் மந்திரம் புரிந்தது’ என்று எழுதுகிற கல்யாண்ஜியை இந்தத் தொகுப்பில்தான் எல்லா கல்யாண குணங்களும் கொண்ட சுந்தரனாய் கண்டு கொள்ளமுடிகிறது.
மௌனம் கலைகிறபோது எழுகிற ஆற்றலை அரிய இயலாது.
அது பாற்கடலை கடைவது போல்தான்.
நஞ்சு நீக்கி அமுதம் திரளும் தருணம்.
சொல் உக்கிரம் பெறும்காலம்.
‘குளிராவது ஒன்றாவது? என்று என்றைக்காவது மௌனம் பேசியிருக்குமா? உரத்தக் குரலில் பேசியிருக்கிறது.
இத்தொகுப்பில் வாழ்வின் ரகசியத்தை வாழ்வு தரும் வலியோடு வரைந்திருக்கிறார் கல்யாண்ஜி. இல்லை கல்யாண சுந்தரன்.
Be the first to rate this book.