தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கியில், மிக உயர்ந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஆராவமுதன் கிருஷ்ணன், ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு, உத்தர காண்டம் தவிர்த்து, அந்தக் காவியத்தின் இதிகாச கதாபாத்திரங்களைப் பற்றி இந்நூலில் அலசி, ஆராய்ந்து அற்புதமான விளக்கங்களை எழுதியிருக்கிறார்.இதற்கு முன்னர், இதே நூலாசிரியர், ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம், ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்கிறார். இவருடைய ஆழ்ந்த புலமையும், அளவிடற்கரிய ஈடுபாடும் இந்த நூல் எழுத, மிகப்பெரிய அளவில் துணை புரிந்திருக்கிறது.
ராமன் துவங்கி விபீஷணன் வரை இவர், பன்னிரெண்டு கதாபாத்திரங்களை நம் பார்வைக்கு வைக்கிறார். அனேகமாக, முழு ராமாயணமும் இடையிடையே, இழையாக குறுக்கும் நெடுக்குமாக வந்து போகிறது.கம்பன் விழாக்களில் ராமாயணக் கதை மாந்தர்கள் அக்குவேறு, ஆணிவேராக அலசி ஆராயப்படுவர். கதைச்சுவை, இலக்கியச்சுவை, மொழிச்சுவை என, பலதரப்பட்ட சுவைகளை நாம் கேட்டு மகிழ்ந்து வருகிறோம்.
கிருஷ்ணனின், இந்த நூலில் கதைமாந்தர்களின் பண்பு நலன்கள், ஆழமாக விவாதிக்கப்பட்டு, அமிர்தத்திற்கு சற்றும் குறையாத வகையில்,வாசகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாத்திரங்களை விளக்கிக் கூறுகையில், யதார்த்தமான, ஆற்றொழுக்குப்போன்ற இயல்பான தமிழ்நடை. இதிகாசத்தில் மூழ்கி முத்து எடுப்பது போல், ராமாயணத் தூமணிகள், மகத்தான உழைப்பின், உருவில் அமைந்த சிறந்த படைப்பு.
Be the first to rate this book.