தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார் திருச்சி வேலுசாமி. இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார். சந்திராசாமி, சுப்ரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியும்கூட புலன் விசாரணைக் குழுவினர் அவற்றைச் சட்டை செய்யாமல் புலிகளை மையமாகக் கொண்டே செயல்பட்டனர். உலகம் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் திருச்சி வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாருக்கும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை. சி.பி.ஐ. புலன்விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ராகோத்தமன் எழுதிய நூலில் புலன்விசாரணை உண்மையாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டுள்ளாரே? அதற்கு முன்னாள் அதே புலன்விசாரணைக் குழுவில் ஆய்வாளராக பணியாற்றிய மோகன்ராஜ் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என பகிரங்கமாகக் குற்றம் சாட்டிவிட்டு தனது பதவியலில் இருந்து விலகினாரே? ஏன்? அடுக்கடுக்கான இந்த வினாகளுக்கு இதுவரை விடை இல்லை. மாணவர் காங்கிரசின் துடிப்புமிக்க இளைஞராகவும் பின்னர் ஜனதாக்கட்சியின் அகில இந்திய செயலாளராகவும் இயங்கிய வேலுசாமி சந்திராசாமிக்கும், சுப்ரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் நிச்சயமாக பங்கு உண்டு என்பதை பல்லாண்டு காலமாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டும் இந்த நூல் திறவாத விழிகளையும் திறக்க வைக்கும் சிந்திக்காதவர்களையும் சிந்திக்கவைக்கும் என நம்புகிறேன்.
- பழ. நெடுமாறன்
Be the first to rate this book.