இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய் விளங்குகிற நூல். மகாவித்வான், ரா.இரா., மிகப் பெரிய ஆராய்ச்சி அறிஞர், கவிஞர், ஆசுகவி. நூல்கள் பல யாத்தவர். அவருடைய பெரும் புலமை இந்த நூலில் வெளிப்படுவதை, நூலைப் படிப்போர் உணர்வர். நுண்ணறிவால் பாட வேறுபாடுகளை குறிப்பிட்டு, மிகப் பொருத்தமான பாட பேதத்தை ஏற்று, விளக்கம் அளித்துள்ளார்.
இந்தத் தமிழறிஞரின் புலமைத் திறம் கண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1935ம் ஆண்டில் தமிழாராய்ச்சித் துறையில் அமரச் செய்தது. அங்கு, அவர் முதன்மை ஆராய்ச்சியாளராக திகழ்ந்து எழுதிய ஆய்வு நுால்களாகிய குறுந்தொகை விளக்கம், பெரும்பாணாற்றுப்படை ஆராய்ச்சியும் உரையும், பட்டினப்பாலை ஆராய்ச்சியும் உரையும் ஆகிய மூன்று நூல்கள், ஒரு நூலாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.
காதலியிடம் தன் காதல் தோன்ற நலம் பாராட்டி, காதலன் பாடிய, ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனத் துவங்கும் இரண்டாம் பாடல், பலரும் அறிந்தது. அதன் உரைச் சிறப்பை படித்து உணர்தல், புலமையை வளர்க்கும்.
‘யாருமில்லைத் தானே களவன்’ என்ற, 25ம் பாடலில், ‘கள்வன்’ என்பது பொருந்தாதது என்பதை விளக்கி, களவன் என்று பாட வேறுபாட்டைக் குறிப்பிட்டு, ‘களத்திலிருந்த சான்றாவான்’ எனக் கூறியிருப்பது பொருட்சிறப்பும், பொருத்தமும் ஆகும். இவ்வாறே அனைத்துப் பாடல்களையும் சிறப்புற விளக்கியுள்ளார்.
பெரும்பாணாற்றுப்படை நூலில் முந்தையோர் கூற்றை மறுத்து, பல்லவன் என்பதற்கு ஆதாரங்கள் தந்து விளக்கியுள்ளார்.
சோழன் கரிகாற்பெருவளத்தான் ஆகிய திருமாவளவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பட்டினப்பாலை, தமிழரின் வாழ்வியல் பண்பாட்டையும், செல்வச் செழிப்பையும் விளக்குவதை காணலாம். மிகச் சிறந்த உரை விளக்கம். படித்து, புலமையை வளர்த்துக் கொள்ளலாம். போற்றிப் பாதுகாக்கத் தகுந்த நல்ல நூல்
Be the first to rate this book.