இஸ்லாமிய உலகக் கண்ணோட்டமே இஸ்லாத்தின் கோட்பாடுகளும், பெறுமானங்களும், எண்ணக்கருக்களும் கிளைபிரியும் வேராகும். அவற்றின் இயல்பை வரையறை செய்யக்கூடியதாகவும், அவற்றின் மூலாதாரத் தன்மையையும் முழுமொத்த இலக்குகளையும் பிரதிபலிக்கக்கூடியதாகவும் அக்கண்ணோட்டம் அமைந்துள்ளது. எப்போதும் இக்கண்ணோட்டம் தெளிவாகவும், மயக்கங்கள் அற்றதாகவும் இருக்க வேண்டும். இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும், முரண்பாடுகளோ ஊகங்களோ அற்றதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அது தனிநபர்களையும் சமூகத்தையும் இயக்குகின்ற உந்துசக்தியாகவும், உள்ளார்ந்த நம்பிக்கை பலமாகவும் இருக்கும். எப்போது இக்கண்ணோட்டம் தெளிவற்றதாகவும், போலித்தன்மை நிரம்பியதாகவும் மாறுகிறதோ, அப்போது முஸ்லிம் சமூகத்தை இயக்குகின்ற அதன் கோட்பாடுகளுக்கு எந்தத் தாக்கமும் இல்லாது போய்விடும்.
முஸ்லிம் சமூகத்தில் இன்று நாம் புரிதல் குறைபாட்டையும், இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் பற்றிய அறிவியல் ஈடுபாடின்மையையும், எதிர்மறை மனப்பாங்கையும் காண்கிறோம். அன்றுமுதல் இன்றுவரை முஸ்லிம் சமூகம் அனுபவித்துவரும் வீழ்ச்சிக்கும், பின்னடைவுக்குமான காரணங்கள் இவையே. எனவே, முஸ்லிம் அறிவுஜீவிகள் இத்தகைய மயக்கத்திலிருந்து முற்றாக விழித்துக்கொள்ள வேண்டும். சிந்தனையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சீர்திருத்தவாதிகளும் வினைத்திறத்தோடு செயலாற்ற வேண்டும். தமது பாரம்பரியங்களையும், நாகரிகப் பிரதிகளையும் ஆக்கப்பூர்வமான விமர்சன நோக்கோடு ஆய்வுசெய்ய வேண்டும். இல்லையெனில், முஸ்லிம் சமூகத்தைப் பீடித்துள்ள பின்னடைவையும், தோல்வியையும் நாம் செயற்திறனோடு எதிர்கொள்ள முடியாது போய்விடும்.
Be the first to rate this book.