நம்முடைய பாரம்பரியமே கதை சொல்வதுதான். வியாசரோ, வால்மீகியோ, இளங்கோவோ, சாத்தனோ யாராக இருந்தாலும் சிறந்த கதைகளைச் சொல்லித்தான் வாழ்வைச் செம்மையாக்க முயற்சி செய்தார்கள். ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த வடிவங்கள் வேண்டுமானால் வெவ்வேறு வகைகளில் இருக்கலாம். இந்நூலின் கட்டுரைகளும் அப்படித்தான். ஒவ்வொன்றிலும் பல கதைகள் உள்ளன. சில கட்டுரைகள் சிரிக்கச்செய்கின்றன. சில சிந்திக்க வைக்கின்றன. சில சிரித்துக் கொண்டே சிந்திக்க வைக்கின்றன. சிரித்தாலே நோய் தீர்ந்துவிடும் என்று அன்த்துவன் தெலா சால் என்பவர் பதினோராம் லூயியின் மனநோயைத் தீர்க்கப் பலான நகைச்சுவைக் கதைகள் சொல்லி வைத்ததிலிருந்து அறிய முடிகிறது.
இந்நூலில் பல நாட்டுப்புறக் கதைகளை ஆங்காங்கே காண முடிகிறது. நாட்டுப் புறக்கதைகள் நமக்கு வழிகாட்டிகள் என்று ராஜ்ஜா அழுத்தமாகக் கூறுகிறார். “இன்றையத் தொலைக்காட்சியில் திணறித் திணறிச் சொல்லப்படும் கவைக்கு உதவாத நீண்ட தொடர்கதைகள் அல்ல அவை” என்று ராஜ்ஜா எழுதும்போது அதில் உள்ள எள்ளலும் அங்கதமும் உண்மையே என்பதை நாம் உணர முடிகிறது.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழ்கள் எல்லாவற்றையும் அந்தந்த இதழ்கள் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் ராஜ்ஜா அறிமுகம் செய்வது வரவேற்கக் கூடிய ஒன்று. இந்திய ஆங்கில இலக்கியத்தில் முதல் இதழ் புதுச்சேரியிலிருந்து வெளிவந்த ‘ஆர்யா’ [arya] என்பது நாம் அறியாத செய்தி. மேலும் ஸ்ரீ அரவிந்தர் அதைத்தம் நாற்பத்து இரண்டாம் பிறந்த நாளில் [15-05-1914] தொடங்கி வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் தனிமை குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது. நகைச்சுவையோடு கூடிய கட்டுரையானாலும் அதில் உள்ள செய்திகள் நம் சிந்தனையை அதிகம் தூண்டுகின்றன. 28 எழுத்தாளர்கள் தத்தம் தனிமையைப் பற்றி ஒளிவு மறைவின்றிப் பேசி இருக்கிறார்கள்.
- வளவ. துரையன்
Be the first to rate this book.