மத்திய அரசு கொண்டுவர இருக்கும் புதிய கல்விக்கொள்கை -2016 குறித்த மிகக் கூர்மையான விமர்சனங்களை முன் வைக்கிறது இந்நூல். GATS ஒப்பந்தத்தின் அடிச்சுவட்டில், கல்வியை ஒரு வியாபாரப் பண்டமாக சட்டப்படி மாற்றுகின்றது இந்தக் கல்விக் கொள்கை. கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வடிவில் முதலில் ஒரு ஆவணத்தையும் பின்னர் கல்விக்குத் தொடர்பில்லாத ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கையாக ஒரு ஆவணமும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பாக உள்ளீடு என்கிற ஒரு ஆவணமுமாக ஒரே கொள்கைக்கு மூன்று ஆவணங்களை வெளியிட்டு மக்களைக் குழப்புவதில் துவங்கி இறுக்கமான அதிகாரமயப்படுத்தும் பாதையில் நம் கல்வித்துறையை தள்ளுகிற முயற்சி, சமஸ்கிருதத்தை பரவலாக்கும் கனவு, தாய்மொழிக் கல்வி குறித்த வெற்றுச் சவடால், சத்தமில்லாமல் பத்தாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை இரண்டாகப் பிரித்து, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ஒரு கீழ்நிலைக் கல்வியும் உயர்தட்டு குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியும் எனத் தெளிவாகக் கீழ்த்தட்டு மக்களுக்குக் குலக்கல்வியை சிபாரிசு செய்யும் சதி, இட ஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாத கள்ள மௌனம், மதச்சார்பற்ற - ஜனநாயக மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள UGC, NCERT, AICTE போன்ற அமைப்புகளை எல்லாம் ஒழித்துவிட்டு GATS சொல்லுகின்ற விதிகளை அப்படியே எதிரொலிக்கும் நோக்குடன் புதிய கல்வி அதிகார அமைப்பை உருவாக்குவது, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஜனநாயகப்பூர்வமான மாணவர் அமைப்புகளை இல்லாமல் செய்ய ட்ரிப்யூனலை அமைத்து மாணவர்கள் நீதி கோரும் வாய்ப்பை நிராகரித்தல் என எண்ணற்ற வழிகளில் நம் குழந்தைகளின் எதிர்காலத்தை இருள்மயமக்கும் இந்தக் கல்விக்கொள்கையில் பொதிந்திருக்கும் ஆபத்துக்களையும் அபத்தங்களையும் தோலுரித்துக் காட்டுகிறது இந்நூல். உலகமயம் மற்றும் இந்து வகுப்புவாதம் ஆகிய இருமுனைக் கத்தியை நம் குழந்தைகளின் தலைக்குமேல் தொங்கவிடும் இக்கல்விக்கொள்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த சக்திமிக்க ஆயுதமாக இச்சிறுநூல் விளங்குகிறது.
Be the first to rate this book.