‘புரட்சிகர மருத்துவர்கள்’ வெனிசுலாவின் புதுமையான, ஊக்கமளிக்கும் ஒரு சமுதாய உடல்நலப் பராமரிப்புத் திட்டத்தின் நேரடித் தகவல்களை வாசகர்களுக்கு அளிக்கிறது. இந்தத் திட்டம் பெருவாரியான ஏழைகள் தாங்களாகவே செயல்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நீண்டகாலப் பங்கேற்பிலிருந்தும் ஆழமான ஆய்விலிருந்தும் கிடைத்த தகவல்களைப் பயன்படுத்தி ஸ்டீவ் புரோவர், இந்த நூலில் வெனிசுலாவின் ஒருங்கிணைந்த சமுதாய மருத்துவத் திட்டம் தோன்றிய கதையைச் சொல்கிறார்.
இதன்படி மருத்துவ ஆசிரியர்கள் கிராமப்புறங்களுக்கும் ஏழைகள் வசிக்கும் நகர்ப்புறங்களுக்கும் சென்று விவசாயிகள், தொழிலாளர்களிடையே ஆள்களைச் சேர்த்து, அவர்களை மருத்துவர்களாக்குவதற்குப் பயிற்சியளிக்கிறார்கள்.
இத்தகைய திட்டங்கள் முதன்முதலில் கியூபாவில் உருவாக்கப்பட்டன. கியூபாவைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் இன்று வெனிசுலாவிலும் உலகெங்கும் ஆலோசகர்களாகவும் அமைப்பாளர்களாகவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
இந்தப் ‘பன்னாட்டு மாதிரி’ பெரும் வெற்றி பெற்றிருக்கிறது; இன்று கியூபா, மருத்துவத்திலும் மருத்துவப் பயிற்சியிலும் ஓர் உலக முன்னோடியாக விளங்குகிறது. மேலும் கியூபா மூலம் உதவிபெற்ற வெனிசுலா மக்கள் இப்போது எவ்வாறு இருக்கிறார்கள் என்பதையும் புரோவர் விவரிக்கிறார்.
ஆனால் இந்தத் திட்டத்திலும் சவால்கள் இருக்கின்றன. இது வெனிசுலாவின் மரபுவழிப்பட்ட மருத்துவர்களிடமிருந்தும் வெனிசுலா-கியூபா நாடுகளின் புரட்சிக்கு எதிரான சக்திகளிடமிருந்தும் கடுமையான பகையை எதிர்கொண்டு வருகிறது.
‘புரட்சிகர மருத்துவர்கள்’இதிலுள்ள தடைகளையும் விவரிக்கிறது; அவற்றையும் மீறி, ஏழைகளின் நலவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூகம், தான் எந்த மக்களுக்குச் சேவையாற்றுகிறதோ, அவர்களுக்கு நேரடியாக அதிகாரமளிக்கிறது; தேவையான உடல்நலப் பராமரிப்பை வழங்கி, யதார்த்தத்தில் அந்த உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் நிரூபிக்கிறது.
மக்களுக்கு மருத்துவ அதிகாரம் அளிக்க விரும்புபவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.
Be the first to rate this book.