கேட்டிராத பண்ணிசைகள்
தொலைவில் ஒலிக்கின்றன
சில பாடல்களில் இடையில்ஒலிக்கும்
கேவல்கள் பெருவெளிகளை நோக்கி வழிகின்றன.
பெருகிப் பாயும் இசையைக்
கருவியில் மீட்ட யாருமற்ற போது
தாராதேவி அதனை ஏந்திக் கொள்கிறாள்.
அவளது முற்றத்தில் அணில்கள்
ஆயிரம் இரண்டாயிரமாய் வந்து குவிகின்றன.
மனிதர்கள் கேளா இசையை
மண்டலத்தின் உயிரிகள் மீட்டுகின்றன.
யாரும் இல்லாத இடங்களில்
அலைந்து தொலைந்து அறைமீண்ட பின்
அந்த இசையைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் போது
தேனீ ஒன்று சன்னல் கண்ணாடியில் முரளுவதைக் கண்டால்
கண்ணீர்க் கசிய வணங்குங்கள்
வேறெதுவும் செய்ய வேண்டாம்.
Be the first to rate this book.