உலகத்தின் ஜனநாயக மிதியடியாகக் கிடக்கிறது இலங்கை. இனவெறித் தாண்டவங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, புத்தனின் தேசத்தையே ரத்த வாடைக்குள் தள்ளியிருக்கிறது சிங்கள வெறி. நடந்த கொடூரத்தின் வேதனையை நேர்நின்றுப் பார்க்கிற தைரியத்தில் அக்கிரம தேசத்துக்கே சென்று பட்ட ரணத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். போர் தொடங்கிய போதும், படிப்படியாக வெறி பெருகி பன்னாட்டுச் சர்வாதிகாரங்களுடன் சிங்கள அரசு தனது கொடூரப் போரைத் தீவிரமாக்கியபோதும், சுருட்டி வீசப்பட்ட கோரைப்பாயாக ஈழக்கனவு சிதைக்கப்பட்டபோதும், இன்று இழவு தேசமாக இலங்கை மாறிவிட்டபோதும்... இனப் பிள்ளைகளாக நாம் செய்தது வேடிக்கை பார்த்தது மட்டுமே! உலகத்தின் கொடூரச் சுடுகாடாக மாறி இருக்கும் இலங்கைக்கு எதிராக இப்போதுதான் சர்வதேச ஜனநாயக சக்திகள் வாய் திறக்கத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையின் இனவெறிக் கொடூரத்துக்கு எதிராகத் தொடங்கி இருக்கும் ஒருமித்த போரின் எழுச்சி நெருப்பாக இந்த நூல் நிச்சயம் விளங்கும். இலங்கை வாழ் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள், பட்ட துயரங்கள், கடந்துவந்த பாதைகள், எதிர்கொண்ட சூழ்ச்சிகள், புலிகளின் நினைவிடங்கள், வாழ்வாதாரத் தடயங்கள், மலையகத்துக்குத் தமிழகத் தமிழர்கள் வந்த பின்னணி, திலீபனின் கடைசித் தருணங்கள், சிங்களர் என்பதற்கான வரலாற்றுப் பின்னணி என இலங்கையில் ஒவ்வொரு நாளும் நடந்தேறிய நிகழ்வுகளை காட்சியாகவும் சாட்சியாகவும் ‘ஜூனியர் விகடனி’ல் தொடராக எழுதினார் தம்பி தமிழ்ப் பிரபாகரன். அந்த அக்னித் தொடரே இப்போது புத்தக வடிவில்! இடிந்தகரை மண்ணில் இன்றும் போராடிவரும் சுப.உதயகுமாரனின் அணிந்துரையும், கவிஞர் காசி ஆனந்தனின் கருத்தும் இந்த நூலின் வன்மைக்கு சாட்சியானவை. கண்ணீராக - கடுந்தீயாக உணர்வெழுச்சி கொள்ளத்தூண்டும் இந்த நூல் உலகத்தின் மனசாட்சியை உலுக்கும் பேராயுதம்!
Be the first to rate this book.