ஓர் அமெரிக்கப் பெண்மணி நபிகள் நாயகத்துக்கு எழுதிய காதல் கடிதங்கள் இவை. ஒரு பெண்ணாகவும் அமெரிக்கராகவும் அண்ணலாரின் ஆளுமையை அவர் அணுகும் விதம் சுவாரஸ்யமானது. இக்கடிதங்கள் நமக்கே நம்மைக் காட்டுகின்றன. நமக்கு அப்படி என்ன தகுதியிருக்கிறதென்று நாம் நபியை நேசிக்கிறோம்? நம் மனத்தின் கள்ளமும் கசடும் நாமறியோமா? புழுதியின் ஒரு துகளும் இதுவரை ஒட்டவே ஒட்டாத தூய மனம் நம்முடையது என்று கோர முடியுமா நம்மால்? ஆனாலும் நபியை நேசிக்கிறோம் அல்லவா? அவ்வாறான சுயபரிசீலனையுடன் இக்கடிதங்களை வாசித்துச் செல்வது அலாதியானதொரு அனுபவம் தர வல்லது.
அன்னாவின் இக்கடிதங்கள் அமெரிக்கக் கலாச்சாரத்தில் வளர்ந்த ஒருவர், அதிலும் குறிப்பாக ஓர் அமெரிக்கப் பெண், இஸ்லாத்தை எப்படி உள்வாங்குகிறார், நபியின் வாழ்க்கையை எப்படிக் காண்கிறார் என்கிற காட்சியை நமக்கு வழங்குகின்றன. நெடுமரபில் வேர் பிடித்துள்ள கிழக்கத்திய முஸ்லிம் ஒருவருக்கு, அவர் புரிதிறன் அற்றவராய் இருக்கும்பட்சத்தில், அன்னா வெளிப்படுத்தும் அணுகுமுறைகள் சற்றே அதிர்ச்சி அளிக்கக்கூடும். அப்படியான அம்சங்களும் இக்கடிதங்களில் இருக்கின்றன.
”நபிக்காதல்” (இஷ்கே ரசூல்) என்பதுதான் இஸ்லாத்தின் உயிர்நாடி என்பதாக ஸூஃபிகள் விளக்கம் தருகின்றனர். இக்கடிதங்களில் வெளிப்படுவதும் ஒருவகை நபிக்காதலே!
Be the first to rate this book.