பொருள்கோள் (ஹெர்மனூடிக்ஸ்) என்பது பொருள் விளக்கத்திற்கான கோட்பாடு, ஆய்வுமுறை. இது இறையியல், ஞான இலக்கியம், தத்துவம் சார்ந்த பிரதிகளைப் பொருள் விளக்குவதற்கான கோட்பாடாக உருவானது.
ஆனால் இன்று வாய்மொழி, தகவல் தொடர்புகள், முன்கணிப்புகள், சட்டம், வரலாறு போன்றவற்றிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பொருள்கோள் முந்தைய பொருள் விளக்கக் கொள்கைகளையும் முறையியலையும்விட மேலானது. அது புரிந்துகொள்ளல், தொடர்பாடல் கலையையும் உள்ளடக்கியிருக்கிறது.
தமிழில் ஒரு முன்னோடியாக அமையும் இந்தப் புத்தகத்தில் க. பூரணச்சந்திரன் தொல்காப்பியத்தை முன்வைத்து நமக்குப் பொருள்கோள் கோட்பாடுகளை அறிமுகம் செய்கிறார்.
பத்து இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் நான்கு இயல்கள் மேற்கத்திய நோக்கில் பொருள்கோள் பற்றி விளக்குகின்றன. ஐந்தாம் இயல் தனித்த போக்கினதாக, தொல்காப்பியப் பாயிரத்தை எவ்விதம் நோக்கலாம் என்பதாக அமைந்துள்ளது. பிற இயல்கள் தொல்காப்பியம் கூறும் பொருள்கோள் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றன.
பொருள்கோள் முறைமையின் பெரும்பகுதி நமது உரைகாரர்களின் முறைகளைக் கொண்டிருக்கிறது. அதனினும் ஆழமாகச் சென்று, ஒரு பிரதியில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணும் துறையாகப் பொருள்கோள் எவ்வாறு அமைந்துள்ளது என விளக்குகிறது இந்த நூல். தொல்காப்பியம் என்னும் நமது செல்வத்தைப் பொருள்கோள் நோக்கில் ‘எவ்விதம் அணுகலாம்’ என்பதோடு நிற்காமல், தொல்காப்பியமே பொருள்கோள் அணுகுமுறைகளை ‘எவ்விதம் தன்னகத்தே கொண்டு இலங்குகிறது’என்பதையும் விளக்குகிறது; இதுவரை தொல்காப்பிய ஆய்வாளர்கள் எவரும் பயன்படுத்திய ‘நோக்கு’களுக்கு அப்பாலும், மேலும் ஆழமாகப் பொருள் காண்பதற்குக் கையாள வேண்டிய நெறிகளைக் கோடிட்டுக் காட்டுகிறது இந்த நூல்.
ஒரு தருணத்தில் புரிந்துகொண்டதை மற்றொரு சூழ்நிலையில் விளக்க விரும்புபவர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய புத்தகம்.
Be the first to rate this book.