கார்டினல் ஹோர்கே மரியோ பெர்காகிலியோ 2013-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி 266-ஆவது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு போப் பிரான்சிஸ் ஆகிறார். இவர் எங்கு பிறந்தார்? எங்கு படித்தார்? என்று ஆரம்பித்து தற்போதைய அவரது இறைப் பணி வரை தெளிவாக அனைவரும் எளிதாக தெரிந்துகொள்ளும் வகையில் தொகுத்தெழுதியுள்ளார் நூலாசிரியர்.
போப் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? அந்த தேர்தல் முறைகள் எவ்வாறு இருக்கும்? பிரான்சிஸ் என்று பெயர்வரக் காரணம் என்ன? என்பன போன்ற பல கேள்விகளுக்கும் விடைகள் இந்நூலில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போப்பின் புதிய இறையியல் கொள்கைகள், இவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள், போரின் போது இராணுவத்தால் அடைந்த துயரங்கள், அதில் இருந்து மீண்டு எழுந்தது போன்றவை இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர் பயணம் செய்த நாடுகளில், நிகழ்த்திய உரைகளில் மதநல்லிணக்கம் மேலோங்கி காணப்பட்டது.
முதன் முதலில் ஐ.நா. சபைக்கு வந்து அங்குள்ள உலகத்தலைவர்கள் முன்னால் பொதுச்சபையில் உரையாற்றிய முதல் போப் இவர்தான். அப்போது அவர், ஏழைகளை வறுமையிலிருந்து விடுவிக்கவேண்டும் எனவும் சுற்றுச்சூழல் பற்றியும், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றியும் பேசினார்.
போப்பாக பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் முன் அவருக்கு பலதரப்பில் இருந்து வந்த எதிர்ப்புகள், அந்த எதிர்ப்புகள் அனைத்தையும் அவர் எதிர்கொண்டு அதில் வெற்றி கண்ட விதம் பற்றியும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த படைப்பு.
தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.
'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.
Be the first to rate this book.