தமிழ்நிலக் கரிசல் வட்டார மக்களின் சமூக வாழ்வியலை விவரிக்கும் 'பூத்த கரிசல்' சிறுகதைகள், கரிசலின் வைப்பாற்றங்கரைச் சமூகப் பண்பாட்டு வரைவியலாய் மலர்ந்திருக்கிறது.
இக்கதைகள் யாவும் எளிய மக்களின் வாழ்வியலையும், மனக் கோலங்களையும், நுண் உணர்வுகளையும், உள் முரண்களையும், மனித உறவுகளையும் மிக அழகாய் எடுத்துரைக்கின்றன.
கதைகள் வழியிலான சமூக ஆவணமாய் மலர்ந்திருக்கும் பூத்த கரிசல் நூலானது, தமிழ் இலக்கிய உலகில் மணம் பரப்பியும், கரிசல் வட்டார இலக்கிய மரபை வளப்படுத்தும் பாங்கிலும் உயிர்ப்பைக் கொண்டிருக்கிறது.
விதைகள் தூங்கினாலும் உள்ளேயிருக்கும் பெருமரத்தின் உயிர்மம் தூங்காது. அதைப்போல, ஐ.ஏ.எஸ் அதிகாரி எனும் அரசுப் பணிகள் நிமித்தமாக ஓடிக்கொண்டே இருந்தாலும், தனக்குள் புதைந்து கிடக்கும் படைப்பாக்கத்தைக் கதை சொல்லல் முறையில் வெளிப்படுத்தி,'பூத்த கரிசல்' மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமாகும் சி.முருகன் அவர்கள், தனித்துவமாய் மிளிர்வார்; வளர்வார் எனும் நம்பிக்கையை இந்தக் கதைகள் தந்திருக்கின்றன.
சி.முருகன் அவர்கள், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உள்ள கத்தாளம்பட்டி எனும் குக்கிராமத்தில் திரு சி.சின்ன கோவிந்தன் - சிவகாமி தம்பதியினருக்கு 1976ஆம் ஆண்டில் முதலாவது மகனாகப் பிறந்தவர். மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இளநிலை வேளாண் படிப்பும், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கேரள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைத் தோட்டக்கலை அறிவியல் படிப்பும் பயின்றவர்.
பள்ளி, கல்லூரிகளில் பயின்ற காலங்களில் பல பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றதோடு, நுகர்வோர் நலம், அறிவொளி இயக்கம் போன்ற திட்டங்களையொட்டிய மேடை நாடகங்களை எழுதியும் நடித்தும் பாராட்டு பெற்றவர்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் வங்கியில் இரண்டு ஆண்டுகள் வங்கி அதிகாரியாகப் பணி புரிந்தவர். தமிழ்நாடு காவல் பணியில் காவல் துணைக் கண்காணிப்பாளராக (Deputy Superintendent of Police) நான்கரை ஆண்டுகள் பணியாற்றியவர்.
அதற்குப் பிறகு, இந்திய ஆட்சிப் பணியில் (Indian Administrative Service) மேற்கு வங்க மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகக் கடந்த பதினேழு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். 'பூத்த கரிசல்' இவரது முதல் நூல் ஆகும்.
இலக்கிய உலகில் மிளிர்ந்திட உளமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
முனைவர் ஏர் மகாராசன்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
Be the first to rate this book.