தமிழைப் பிழையில்லாமல் எழுத வேண்டுமென்றால் அதன் அடிப்படைகளைக் கற்க வேண்டும். “இங்கே வலிமிகும், இங்கே வலிமிகாதுன்னுதான் நினைக்கிறேன்” என்று பொத்தாம் பொதுவாக அறிந்து வைத்திருந்தால் பிழையில்லாமல் எழுதவே இயலாது. அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லாரும் தமிழில் ஒரு சொற்றொடர் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நன்றாகவும் பிழையின்றியும் எழுதத் தெரிந்தால்தான் வெற்றி பெறுவீர்கள். குறுஞ்செய்தியிலிருந்து நூல் எழுதுவதுவரைக்கும் தமிழைப் பிழையற எழுதத் தெரிந்திருத்தல் வேண்டும். பிழையின் முதல் தோற்றுவாய் வலிமிகுவித்தல் தொடர்பான அறியாமைதான். அதனைப் பழுதற அறிய வேண்டும் என்றால் இரண்டு சொற்களுக்கிடையே நடக்கின்ற இலக்கண வினைகள் அனைத்தையும் அடிமுதல் முடிவரை அறிந்திருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியாகின்ற தமிழ்ப்பரப்பில் அப்பொருளில் யாரேனும் நுணுகி எழுதித் தெளிவிக்க முயன்றார்களா ? இல்லை. சிறுகுறிப்பளவில் சில எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றால் யார்க்கும் எந்தத் தெளிவும் கிடைக்காது. அப்போதைக்குத் தெரிந்ததுபோல் தோன்றுவது பிறகு மறந்துவிடும். இந்நெடுநாட்குறையைப் போக்கும் நூல் இந்நூல். தொகை, தொடர் என்று முழு வழக்கினையும் தொகுத்து வகுத்து அட்டவணைப்படுத்தியிருக்கிறேன். படிப்படியாக நிரல்படுத்தியிருக்கிறேன். ‘ஆடுமேய்க்கப் போன இடத்தில் அண்ணனுக்குப் பெண் பார்த்ததுபோல்’ இதன் வழியே தமிழ் இலக்கணத்தின் பெரும் பரப்பினையும் தெள்ளத் தெளிவாய் விளங்கிக்கொள்ளலாம். புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள். உணர்வீர்கள்.
Be the first to rate this book.