பிசாசு திரைப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் இத்திரைப்படத்தின் திரைக்கதையும் மற்றும் அவை உருவான விதம், உருவாக்கப்பட்ட கோணத்தைப் பற்றியும் இந்நூலில் கூறியுள்ளார்.
இத்திரைப்படத்தை பற்றிய சில விமர்சணங்கள்:
என்னை ஓர் ஆவியை காதலிக்க வைத்தார் மிஷ்கின் அவரது 'பிசாசு' திரைப்படத்தில்.
- பி.சி.ஸ்ரீராம்.
இறந்த மகளின் கைகள்
அப்பாவின் முகத்தைத் தொடுகின்றன
அவள் மிதந்து வருகிறாள்
எனக்கு இதுதான் பிசாசு
- செழியன்
பொதுவாக நீதிக்காக போராடும் பெண் சிறுதெய்வமாக கொண்டாடப்படுவதற்கு முன் பேயாக உருவகிக்கப்படுவது, பேய்தெய்வங்கள் நிறைந்த நமது சூழலில் பலவடிவங்களில் காணக்கிடைக்கிறது. அதே வேளையில் நீதிக்காக போராடும் ஆண் அநீதி நிறைந்த சூழலில் உயிர்துறக்கும் பொழுது பொதுவாக உடனே தெய்வ நிலையை எய்துகிறான். தொன்றுதொட்டுவரும் இந்த மரபு தமிழ் சினிமாவிலும் தொடர்வதில் ஆச்சர்யமேதுமில்லை.தமிழ் சினிமாவிலும் பெரும்பான்மையாக பெண்ணே பேயாக வருகிறாள். அல்லது ஆணுடலில் புகுந்து தனக்களிக்கப்பட்ட முந்தைய பிறவி அநீதிக்கு நீதி கேட்கிறாள். வன்மையில் ஈடுபடுகிறாள். மிஷ்கினையும் ஒரு பிசாசு தெய்வம் ஆட்கொள்கிறது. ஆயினும் அது பழிக்காக அல்லாமல் காதலுக்காகவும் அன்பிற்காகவும் ஏங்குகிறது. அத்தகைய பிசாசின் மூலம் ஸ்தூல உடலிற்கும் ஆன்மாவிற்கும் ஊடாக உள்ள வெளியில் நவீன டிஜிட்டல் அழகியலைக் கொண்டு தனது கதையாடலை அவர் கட்டமைக்கிறார். பேய்க்கதையை இன்றைய சூழலில் மறுஉருவாக்கம் செய்யும் மிஷ்கின் நமது வாழ்வின் மையத்திலுள்ள அன்பிற்கான ஏக்கத்தின்பால் ஒளிபாய்ச்சும் அதே வேளையில் பெண்களுக்கு விடுதலை அளிக்காமல் கட்டிப்போடும் நமது பண்பினைச் சுட்டிக்காட்டி பிறந்த உடலை ஆவியுடன் சேர்த்து சினிமொழியில் தேர்ந்த ஒரு கலைஞனாக அழகு பார்க்கிறார். அவரது பார்வையில் நாம் பருகும் அத்தகைய அழகு மகிழ்ச்சியின் நிறைவின் உத்தரவாதமாகத் திகழ்கிறது. அதுவே மிஷ்கினின் பிசாசு தெய்வத்தின் சிறப்பு.
- சொர்ணவேல்.
Be the first to rate this book.