தஞ்சை ப்ரகாஷின் நண்பர்களால் திருவாரூரிலிருந்து நடத்தப்படும் இடைநிலை இதழான 'பேசும் புதிய சக்தி’, ரசனை மரபு, நவீன எழுத்து முயற்சிகள், திறனாய்வுகள் என்று இலக்கியத்தின் எல்லாத் தரப்புகளுக்கும் இடமளித்துவருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டுக் கொண்டுவந்திருக்கும் இலக்கிய மலரும், சமகாலத் தமிழ் இலக்கியப் போக்கின் சகல பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாஞ்சில் நாடன், பாவண்ணன், சி.எம்.முத்து, நா.விச்வநாதன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளும் சுகுமாரன், கலாப்ரியா, சமயவேல் உள்ளிட்ட 31 கவிஞர்களின் கவிதைகளும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இந்திரன், ரவிசுப்ரமணியன், க.பஞ்சாங்கம் முதலானோரின் 16 கட்டுரைகளும் தத்தம் பேசுபொருள் சார்ந்து முக்கியமானவை. சுனில் கிருஷ்ணனின் ‘எழுத்தாளர் காந்தியும் மகாத்மா காந்தியும்’ கட்டுரை காந்தியின் புத்தக எழுத்துகளைப் பற்றிய பகுப்பாய்வாக அமைந்துள்ளது. மு.மேத்தா, எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் விரிவான நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. பெருந்தொற்றுக் காலத்தின் துயரிலிருந்து தமிழ் இலக்கிய வாசகர்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற ‘பேசும் புதிய சக்தி’யின் விருப்பம் நிறைவேறட்டும்.
Be the first to rate this book.