பத்து கதைகள், பத்து கதவுகள், பத்து சாளரங்கள், பத்து திசைகள் என்று தத்தம் தனிமையில் அமைவதாகப் பிரகாசிக்கின்றது இத் தொகுப்பு. ஒரு இயக்குனரின் குணாதிசயமும் நடை, உடை, பாவனை, வசன உச்சரிப்பு, அனைத்தும் அவ்விதமே அவர்தம் கதாபாத்திரங்களின் உடல்களுக்குள்ளும் நுழைந்து கொள்வதைப் போன்ற தனித்துவத்தில் தம் எழுத்தினுடாக சங்கரநாராயணனும் நிறைந்திருக்கிறார்.
அவரது சொல்லின் அசைவே அவருடைய கதை மாந்தர்களுக்கும். இதுவே தனித்துவம் . ஒன்று போலற்ற ஒன்று. வேரிலிருந்து உச்சிக்கிளைக்குப் பரவுகின்ற உற்சாகம். இலையின் நுனியிலிருந்து பவுர்ணமி இரசிக்கிற எறும்பின் கண்களின் தியானத் தருணம். பத்து கதைகளும் அற்புதம் எனினும் என்னை அசைத்தவை வெயில், புரவிக்காலம், பட்டம், மனோதர்மம், திருவையாறு, பெருவெளிக் காற்று, இவைதான். இத் தொகுப்பின் அடையாள ஊற்றும் இவைகள் தாம். கண்டு கேட்டுணர்ந்த பக்கங்களை விட உற்றுணர்ந்த பக்கங்களில் நிறையும் சொற்கள் நமக்குத் பிரியமானைவையாகி விடுகின்றன.
தவளைக்கும் மழைக்குமான உறவில் மழையில் நனைகின்ற தவளை உற்சாகத்தில் ஒரு குழந்தையின் கிறுக்கலில் தவளையாகி விடுவதைப்போல ஒரு புது அனுபவத்தை தொடர்ந்து தம் படைப்புகளின் வாயிலாக நிகழ்த்திக் காட்டும் சங்கரநாராயணன் நிமிர்ந்து பார்க்கவும் இயலாதொழிந்த மனித வாழ்வின் இக்கட்டானதொரு புதிர் வழியில் எதிர்ப்பட்டு ஒரு நெசவாளர் தான் நெய்த புடவையொன்றை விரித்துப் போடும் இலாகவத்தோடு ஆகாயத்தை விசிறுகிறார். அதில் இதுவரை யாருடைய கண்களுக்கும் அகப்படாதிருந்த பத்து நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன. என் மனம் போலவே இவ்வுலகமும் இதைக் கொண்டாடும்.
- முன்னுரையில் குமை. மா. புகழேந்தி
Be the first to rate this book.