சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான காமராசரின் அருமை பெருமைகளை, சாதனைகளைச் சொல்லும் நூல்.
மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், அகில இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்ந்ததன் பின்னணியில் இருந்த அவருடைய நற்பண்புகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
1954 இல் தமிழக முதல்வராக பதவியேற்ற காமராசரின் காலத்தில் தான் 11 ஆம் வகுப்பு வரை இலவச் கல்வி அளிக்கப்பட்டது. 1954 இல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்தது. காமராசரின் பதவிக் காலத்தில் அது 77.3 சதவீதமாக உயர்ந்தது. அவர் ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்நாட்டின் 13,638 கிராமங்கள் மின் வசதி பெற்றன.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டம், பெரம்பூர் தொடர் வண்டித் தொழிற்சாலை, சேலம் உருக்குத் தொழிற்சாலை உட்பட பல அரசு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ராயல் என்பீல்டு, அசோக் லேலண்ட், டி.ஐ. சைக்கிள் உட்பட பல தனியார் தொழிற்சாலைகள் தொடங்க ஊக்கம் அளிக்கப்பட்டது. மணிமுத்தாறு அணை, அமராவதி அணை, வைகை அணை, பரம்பிக் குளம் - ஆழியாறு அணை உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செழித்தது.
இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற, மிகவும் திட்டமிட்டுச் செயலாற்றிய காமராசர், கடைசி வரை எளிய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதும், ரேஷன் அரிசியில்தான் அவருக்கான உணவு சமைக்கப்பட்டது என்பதும், சொந்தவீடு எதுவும் அவருக்கில்லை என்பதும், ஏழை மக்களின் தொண்டராகவே கடைசி வரை அவர் வாழ்ந்தார் என்பதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது நம்மை நெகிழ வைக்கின்றன.
Be the first to rate this book.