காவிரி விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி வரும் மத்திய, மாநில அரசுகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். காவிரி நீரைத் தேக்கி வைத்திருக்கும் கபினி, கண்ணம்பாடி அணைகளை உடைக்க வேண்டும் எனப் பெரியவர் தமிழரசன் முடிவெடுக்கிறார். அதற்காகத்தான் எங்கள் ஊர், வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. தமிழரசன் என்பது தெரியாமலே, முகம் தெரியாத ஆள்களோடு சேர்ந்து, மூர்க்கமாக அடித்துப் போட்டு விட்டோம்.
இரத்தக் காயங்களோடு நினைவற்று, நா வறண்டு கிடந்த தோழர்கள், "தண்ணீர் தண்ணீர்..." என முனகினர். குளம் நிறைய நீரிருந்த போதும், நாங்கள் தண்ணீர் தர மறுத்து விட்டோம். தமிழ்நாட்டின், தாகம் தீர்க்க நினைத்த தோழர்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாமலே உயிரை விட்டனர். பெரியவரின் மரணத்திற்குப் பிறகு, அரசு எங்கள் ஊருக்குப் பல சலுகைகளைச் செய்தது. அதில் ஒன்று மேல்நிலை குடிநீர்த்தொட்டி. எந்த இடத்தில் தொட்டி கட்டலாம் என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு செழிக்க வேண்டும் என்கிற வேட்கையோடு புரட்சி செய்தவர் பெரியவர் தமிழரசன்.
தோழர்களை நாங்கள் அடித்துப் போட்டு, உயிர்விட்ட, அதே இடத்தில் தண்ணீர்த் தொட்டி கட்டுங்கள் என்றோம். மகத்தான மக்கள் தலைவனின் மரணத்துக்குக் காரணமான நாங்களும், எங்களின் அடுத்த தலைமுறையினரும், காலம் முழுவதும் குற்ற உணர்வோடு, அந்தத் தொட்டியின் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பெரியவரும், தோழர்களும் மரணித்த இடத்தில், அமைந்துள்ள தண்ணீர்த் தொட்டி எங்களின் தாகத்துக்குத் தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறது.
- பொன்பரப்பி ஊர்ப் பொதுமக்கள்
Be the first to rate this book.