பெரியாரை எதிர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள் இருசாரருக்கும் ஒரு பொருத்தம் உண்டு. பெரியார்
யார் எனக் கேட்டால் இருவரும் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள். கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், இட ஒதுக்கீட்டிற்காகவும் தனிநாட்டிற்காகவும் போராடியவர் என்று. கூடுதலாக வேண்டுமானால் பெண்விடுதலை பற்றிப் பேசியவர் என்பார்கள். எதிர்ப்பவர்களுக்கும் ஆதரிப்பவர்களுக்கும் ஒரே வேறுபாடு என்னவெனில் பெரியாரை ஆதரிப்பவர்கள் இவற்றை வரவேற்பார்கள்; மற்றவர்கள் இதற்காகவே அவரைக் கண்டிப்பார்கள். அவ்வளவுதான்.
ஆனால் இதுதானா பெரியார்? இல்லை என்கிறது இந்நூல். இவை பெரியாரின் ஒரு பக்கமே. ஆனால் பெரியார் இன்னும் ஆழமானவர். விடுதலைக்கான நிபந்தனைகளாக அவர் சொன்னவை 'தேசப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று, சாதிப்பற்று' ஆகிய நான்கையும் விட்டொழிப்பது என்பதுதான். பற்றுக்களை விட்டொழித்தலே விடுதலை என்பதற்கு அவர் இப்படி ஒரு புதிய விளக்கம் அளித்தார். அந்த வகையில் பெரியாரே திருவுரு எதிர்ப்பாளர் (iconoclast) என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் என வாதிடுகிறது இந்த நூல். ஒடுக்கப்படும் யாரும் இந்தப் பற்றுகளில் ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாகும்போது அவர்கள் தன்னளவில் விடுதலையற்றவர்கள் ஆகிறார்கள்.
தமிழ்த் தேசியர்களைப் போல மொழி என்பதை அவர் பிற மொழிக் கலப்பு என்கிற அடிப்படையிலிருந்து விமர்சிப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. பிற மொழிக் கலப்பிலிருந்து மட்டும் மொழியை விடுவித்தால் போதாது. கன்னிகாதானம் என்பதை கன்னிக்கொடை எனத் தமிழ்ப்படுத்திவிட்டால் மட்டும் போதுமா? இரண்டும் பெண் என்பவளைக் கொடை அளிக்கப்படக்கூடிய பொருட்கள் என்றுதானே சொல்கின்றன என்கிற கேள்வியைத் தமிழ்ச் சூழலில் அவரைத் தவிர யாரும் கேட்டதில்லை.
இந்த வகையில் உலகின் மிக நவீனமான ஒரு சிந்தனையாளராகப் பெரியார் திகழ்வதை அடையாளம் காட்டிய வகையில் இது முதல் நூல் மட்டுமல்ல ஒரே நூலும் கூட. அத்துடன் பெரியாரை இதுவரை யாரும் பாராத கோணத்திலிருந்து பார்த்து வியக்கும் இந்நூல் பெரியாரியலுக்கு பேராசியர் அ. மார்க்ஸ் அளித்துள்ள முக்கியமான பங்களிப்பு.
Be the first to rate this book.