நீங்கள் இளமையாக இருந்தபோது, உங்களை நன்றாகப் புரிந்து கொண்டு, நீங்கள் இவ்வுலகத்தை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் பார்க்கவும், வாழ்க்கையில் நீங்கள் எதிர்நீச்சல் போடுவதற்கும் தேவையான ஆழமான அறிவுரைகளை உங்களுக்கு வழங்கிய ஒரு வழிகாட்டி உங்களுக்கு இருந்திருக்கக்கூடும். உங்களுடைய தாத்தா, பாட்டி, ஆசிரியர், சக ஊழியர், அல்லது வேறு யாரோ ஒருவர் அப்பாத்திரத்தை வகித்திருக்கக்கூடும். இந்நூலின் ஆசிரியரான மிட்ச் ஆல்பத்திற்கு அத்தகைய ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் மோரி ஷுவார்ட்ஸ். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு மிட்ச் ஆல்பத்தின் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் அவர்.
மிட்சைப்போலவே, நீங்களும் வாழ்வின் ஓட்டத்தில் உங்களைத் தொலைத்துவிட்டு, உங்கள் வழிகாட்டியுடனான தொடர்பை இழந்திருக்கக்கூடும். உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவரை மீண்டும் சந்தித்து, இன்றும் உங்கள் மனத்தை அரித்துக் கொண்டிருக்கின்ற ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்கவும், அவருடைய ஞானத்தைப் பெறவும் நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள், இல்லையா? அதிர்ஷ்டவசமாக, மிட்ச் ஆல்பத்திற்கு அப்படி ஓர் இரண்டாவது வாய்ப்புக் கிடைத்தது. பேராசிரியர் மோரி, மரணத்தின் வாசலில் நின்று கொண்டிருந்த நேரத்தில் மிட்ச் அவரை மீண்டும் சந்தித்தார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று மோரியின் வீட்டில் நிகழ்ந்த அச்சந்திப்பு, மோரி நடத்திய இறுதி வகுப்பாக மாறியது. அவ்வகுப்பில், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றிய பாடங்களை மோரியிடமிருந்து மிட்ச் கற்றுக் கொண்டார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து செலவிட்ட அத்தருணங்களின் மாயாஜாலமான விவரிப்புதான் இந்நூல். தன்னுடைய பேராசிரியர் தனக்கு வழங்கியிருந்த அற்புதமான பரிசை மிட்ச் இந்நூலின் வாயிலாக இவ்வுலகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.
மிட்ச் ஆல்பம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகின்ற ஒரு நூலாசிரியர், பத்திரிகையாளர், திரைப்பட வசனகர்த்தா, நாடக ஆசிரியர், இசைக் கலைஞர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். அவர் இதுவரை எழுதியுள்ள ஒன்பது நூல்களும் மொத்தமாக நான்கு கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவருடைய நூல்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் பல நூல்கள், விருது பெற்றத் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. அவர் தன் மனைவி ஜெனீனுடன் அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.