அமெரிக்காவின் அடையாளமாக மாறி கோக், கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முட்டி மோதிக்கொண்டிருந்த மற்ற குளிர்பான நிறுவனங்கள் மனம் வெறுத்து சர்பத், தேநீர், காபி என்று வேறு பானங்களில் இறங்கி-விட்டார்கள். இனி கோக் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று கிட்டத்தட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் உள்ளே நுழைந்தது பெப்ஸி.
ஒப்பீட்டளவில் பெப்ஸி அப்போது சுண்டைக்காயில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே இருந்தது. நாங்களும் குளிர் பானம் தயாரிக்கிறோம் என்று பெப்ஸி விளம்பரம் செய்தபோது, கோக் மட்டுமல்ல யாருமே அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தயங்கவில்லை, பதுங்கவில்லை. செலுத்தப்பட்ட அம்பு போல் நேர் திசையில் சென்றுகொண்டிருந்தார்கள். இளைஞர்களை குறிவைத்தார்கள். அடுத்து, நடுத்தர மக்களை. அடுத்தது, அமெரிக்காவை. பிறகு, உலகத்தை.
கோக் இருக்க இன்னொன்றா என்று சொன்ன உலகம் இன்று கோக்குக்கு இணையாக பெப்ஸியை வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெப்ஸியின் இந்த வளர்ச்சி ஒரு நேர்க்கோட்டில் நிகழ்ந்துவிடவில்லை. உலகச் சந்தையை ஏகபோகமாக ஆக்கிரமித்திருந்த ஒரு மாபெரும் ஆளுமையோடு எதிரெதிர் நின்று மோதி தனக்கான ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது பெப்ஸி.
கோக்கின் வெற்றி வரலாறை முன்னதாக எழுதிய என். சொக்கனின் இந்தப் புத்தகம் பெப்ஸியின் வெற்றி சாகசத்தை விவரிக்கிறது.
Be the first to rate this book.