தன்னுடைய இருபதாண்டுகால சமூகப் பணியின் ஊடாக மெலின்டா கேட்ஸ் கற்றுக் கொண்டுள்ள மிக முக்கியமான விஷயம் இதுதான்: நீங்கள் ஒரு சமுதாயத்தை உயர்த்த விரும்பினால், பெண்களை அடக்கி ஒடுக்குவதை நீங்கள் உடனடியாக நிறுத்தியாக வேண்டும்.
குழந்தைத் திருமணத்தில் தொடங்கி, பெண்களுக்குக் கருத்தடைப் பொருட்கள் எளிதில் கிட்டாமல் இருப்பது மற்றும் பணியிடத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மைவரை, நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனைகளைப் பற்றி நம்மால் மறக்க முடியாத விதத்தில் மெலின்டா கொடுத்துள்ள விவரிப்புக்கு, அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் பக்கபலமாக விளங்குகின்றன.
இந்நூலை உணர்ச்சிகரமாகவும் வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ள மெலின்டா, அசாதாரணமான பெண்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதோடு, ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளுவதால் உருவாகின்ற சக்தியையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
நாம் மற்றவர்களை உயர்த்தும்போது, அவர்கள் நம்மை உயர்த்துகின்றனர்.
உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகத் திகழுகின்ற ‘பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை’யைத் தன் கணவர் பில் கேட்ஸுடன் இணைந்து தோற்றுவித்து, ஒரு கொடையாளியாகவும் தொழிலதிபராகவும் திகழுகின்ற மெலின்டா கேட்ஸ், சர்வதேச அளவில் பெண்களுக்காகவும் சிறுமியருக்காகவும் வலிமையாகக் குரல் கொடுக்கின்ற ஒரு மிகப் பெரிய ஆளுமையாகவும் விளங்குகிறார். டெக்சாஸ் மாநிலத்திலுள்ள டல்லாஸ் நகரில் பிறந்து வளர்ந்த மெலின்டா, கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டமும், பிறகு எம்பிஏ பட்டமும் பெற்றார். அவர் தன்னுடைய தொழில்வாழ்க்கையின் முதல் பத்தாண்டுகளை மைக்ரோசாஃப்டில் செலவிட்டார். அதன் பிறகு, அவர் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறி, தன்னுடைய குடும்பத்தின்மீதும் அறப்பணிகள்மீதும் முழு கவனம் செலுத்தலானார். வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சியாட்டில் நகரில் அவர் தன் கணவர் பில் கேட்ஸுடன் வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஜென், ரோரி, ஃபீபி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
Be the first to rate this book.