பழங்குடிகள் வனத்தை ஆள்வதில்லை. எவ்வித பங்கமும் செய்யாமல் அங்கிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்டு வாழ்கிறார்கள். காடுகளையும் மலைகளையும் விலங்குகளையும் பாதுகாக்கிறார்கள். வனத்தின் உணவுச்சங்கிலியில் பழங்குடிகளும் ஒரு கண்ணி. காபித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் வனப்பாதுகாப்பு திட்டங்களும் பழங்குடிகளை அந்தச் சங்கிலியில் இருந்து அறுத்து வனச்சூழலைச் சிதைத்துவிட்டன.
இந்தியாவில் 187 மாவட்டங்களில் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். நாட்டில் உள்ள மொத்த வனப்பகுதி 6 கோடியே 80 லட்சம் ஹெக்டேர். இதில் வெறும் 2 சதவிகிதம் இடத்தில் மட்டுமே பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள்.
ஏறக்குறைய 65 பழங்குடி சமூகங்கள் அழியும் நிலையில் உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. காடர், தோடர், இருளர், பளியர், காட்டு நாயக்கர், கோத்தர் ஆகிய ஆறு தமிழகப் பழங்குடி இனங்களும் அந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பல பழங்குடி சமூகங்களின் மொழிகளும் விளிம்பில் இருக்கின்றன.
அப்பாவிகளாகவும் அச்சப்படுபவர்களாகவும் இருக்கிற பழங்குடிகளை கீழ்நாட்டு மக்கள் வெகுவாக சுரண்டுகிறார்கள். கொத்தடிமைகளாக்கி வதைக்கிறார்கள். பழங்குடிகளின் உற்பத்தியை, சேகரிப்பை சொற்ப விலைக்கு வாங்கி ஏமாற்றுகிறார்கள். ராகியும் தினையும் குதிரைவாலியும் விளைவித்து சத்தான உணவு சாப்பிட்ட ஜவ்வாது மலை மலையாளிகளிடம் சொற்ப விலைக்கு அவர்களின் உற்பத்தியை வாங்கிக்கொண்டு, ரேஷன் அரிசி சாப்பிட பழக்கிவிட்டார்கள் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொரு பக்கம், வனப்பாதுகாப்பு என்ற பெயரில் விறகு சேகரிக்க, காட்டுப்பொருள் சேகரிக்க, மேய்ச்சலுக்குச் சென்ற பழங்குடிகளைத் தடுத்து வனத்தின் உரிமையை பறித்துவிட்டார்கள்.
Be the first to rate this book.