பழந்தமிழக வரலாற்றுக் காலகட்டத்தை திட்டவட்டமான அசைக்க முடியாத சான்றுகளைக் கொண்டு கணித்து, சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும், சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனவும் வரையறை செய்து, பழந்தமிழ்ச் சமூகம் குறித்த ஒரு முறையான காலவரிசைப்படியான வரலாற்றை இந்நூல் தொகுத்து வழங்குகிறது. பழந்தமிழ்ச்சமூகம் கி.மு. 1000க்கு முன்பிருந்து கி.மு. 50 முடிய வளர்ச்சி பெற்ற நகர அரசுகளைக் கொண்டிருந்தது என்பதையும், அவை அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், அறிவியல், தத்துவம், இலக்கியம், இசை, ஓவியம், கட்டிடக்கலை போன்ற பல துறைகளிலும் மகதப்பேரரசை விட மிகச் சிறந்த வளர்ச்சியைப் பெற்றிருந்தன என்பதையும் இந்நூல் நிறுவுகிறது.
தொல்பழங்காலம் முதல் அரசுகள் உருவான காலம் வரையிலும், சுமேரியன் நாகரிகம் முதல் தென் அமெரிக்க நாகரிகம் வரையிலுமான சுருக்கமான உலக நாகரிகங்களின் வரலாற்றை இந்நூல் வழங்குகிறது. பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வு முடிவுகள், வெளிநாட்டு, உள்நாட்டு நூல்கள் போன்ற பலவற்றையும் முழுமையாக ஆய்வு செய்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.பழந்தமிழக நகர அரசுகள் கிரேக்க நகர அரசுகளுக்கு இணையாக, சிலவற்றில் அவைகளைவிட மேம்பட்ட வளர்ச்சியைப் பெற்றிருந்தன என்பதையும், பண்டைய இந்தியா உலகிற்கு வழங்கியதில் பெரும்பாலானவை பழந்தமிழகம் வழங்கியதுதான் என்பதையும் இந்நூல் உறுதி செய்கிறது.
நூல் மதிப்புரைகள்:
புலவர் செ. இராசு.
சங்க இலக்கியங்கள் முழுவதையும் பயின்று பயின்று, பலமுறை பயின்று உள்ளத்து இருத்தினால்தான் இந்நூலை எழுதுவது சாத்தியமாகும்… இது செயற்கரிய செயல்….. உண்மையிலேயே இமாலய முயற்சி…... சங்ககால வேந்தர்களின் சரியான காலத்தை நிர்ணயம் செய்துள்ள இப்பெருநூல் அளவில் மட்டுமல்ல பொருள்பொதிந்த வரலாற்றிலும் மிகப்பெரிய நூல்.
வீ. அரசு, பேராசிரியர்
பண்டைய தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாக இந்நூல் தரும் கால அட்டவணை நம்பகத்தன்மை மிக்கதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது…. சிந்தனை மரபு சார்ந்த வரலாறு, இனமரபு சார்ந்த வரலாறு, சங்கநூல்களின் காலவரையறை ஆகிய பல்வேறுபட்ட பதிவுகள், தமிழகத் தொல்வளங்கள் குறித்து அறிவதற்குப் பெரிதும் துணைபுரிகிறது…. கணியன்பாலன் அவர்களின் தேடல், அதற்கான அவரது உழைப்பு ஆகியவற்றைத் தமிழ்ச் சமூகம் கொண்டாட வேண்டும்.
சிற்பி பாலசுப்ரமணியம்
கணியன் பாலனின் பங்களிப்பு வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைந்ததல்ல. அறிவியல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட சீரிய ஆய்வு. இந்த நூல் எழுதப்பட்ட போது பயன்பட்ட சான்றுகளைக் கடந்து கீழடி அகழாய்வு இந்த ஆய்வின் பாதை சரியானது என்று மெய்ப்பித்து விட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை கால்டுவல் வெளியிட்ட போது எப்படித் தமிழர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டதோ அதுபோல, பாரதியாரின் பாஞ்சாலி சபதம் வெளிவந்த போது எப்படிக் கவிதை இலக்கியத்தில் ஒரு புதிய களம் தோன்றியதோ அது போல தமிழர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கும் நூல் இந்நூல். இந்நூலை வரலாறு என்று சொல்வதைவிட வரலாறு படைத்த வரலாறு என்று சொல்வதுதான் பொருத்தம். இதுவரை இவ்வளவு விரிவாகத் தமிழர் வரலாறு ஆராயப்படவும் இல்லை. அசைக்க முடியாத சான்றாதாரங்களோடு பழமை நிலைநாட்டப் படவும் இல்லை.
கோ.பாலசந்திரன் இ.ஆ.ப (ப.நி)
இந்நூலின் ஆய்வு முடிவுகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் தொல்பொருள் சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவருவது அறிவியல் அடிப்படையில் அமைந்த கணியன் பாலனுடைய ஆய்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்கிறது.
குமணதாசன், தமிழ் இலெமூரியா
தமிழ் தேசிய இனத்தின் பெருமை அல்லது சிறுமைக் கூறுகளை உவப்பும் காய்ப்பும் இன்றி ஆய்வுக்குட்படுத்தி அதன் தொன்மைகளையும் காலச் சுவடுகளையும் தமிழ் மக்களுக்குத் தொகுத்தளிப்பதன் மூலம் நாம் நம்முடைய தற்காலச் சூழ்நிலைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற தெளிந்த நோக்கோடு எழுதப்பட்ட நூல் இந்நூல்…… ஒவ்வொரு தமிழ் நூலகங்களிலும் வீட்டு நூலகங்களிலும் தவறாது இடம்பெற வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம் இந்த அரிய நூல்.
அரங்க குணசேகரன்
கணியன்பாலன் அவர்களால் பழந்தமிழ்ச் சமுதாய வரலாறு, ஒரு புதிய கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது…. அன்று நகர்மைய அரசுகளும் தமிழரசுகளின் கூட்டணியும் இருந்தன; கடற்படை வலிமையும், வணிக மேலாண்மையும் கொண்டதாக தமிழரசுகள் இருந்தன. இந்தியத் துணைக்கண்ட மெய்யியலுக்கும், இசைக்கும் ஆதிமூலம் பழந்தமிழ்ச் சமூகமே போன்ற பல புதிய செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி, பழந்தமிழர்களின் ஒரு மிகச்சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.
நரசய்யா, காலைக்கதிர்
மேலை மொழிகளில் இருக்குமளவுக்கு தற்போதைய தமிழ் ஆய்வாளர்கள் ஆழமாகப் பரிசீலித்து எழுதுவதில்லை என்று என்னுள் இருந்த ஏக்கம் இந்நூலின் முதல் பார்வையிலேயே மறைந்துவிட்டது. கணியன்பாலனின் ஆய்வின் வீச்சும், பரிமாண வியாபகமும் ஆச்சிரியப்பட வைக்கிறது. கால கட்ட அட்டவணை பாராட்டப்படவேண்டிய சாதனை.
Be the first to rate this book.