கி.மு. 1000க்கு முன்பிருந்து பழந்தமிழகத்தில் நகர அரசுகள் இருந்து வந்துள்ளன. கி.மு. 750 முதல் கி.மு. 50 வரையான சங்ககாலத்தில் அவை வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக உருவாகியிருந்தன. இந்த நகர அரசுகள்தான் பழந்தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிறப்புக்கும் காரணமாக இருந்துள்ளன. உலக வரலாற்றில் பேரரசுகளைவிட நகர அரசுகள் சிறந்தனவாக இருந்துள்ளன என்பதை, உறுதிசெய்யும் வகையில் பழந்தமிழக நகர அரசுகள் வட இந்தியாவின் மகதப் பேரரசைவிட, பலவகையிலும் வளர்ச்சி பெற்றனவாக இருந்தன.
சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் என்பது பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதை இந்நூல் உறுதி செய்துள்ளது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி, மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது.
பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிக வளர்ச்சி, உள்நாட்டு வணிக வளர்ச்சி ஆகியன குறித்தப் பல்வேறு விடயங்களை இந்நூல் பேசுகிறது. பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிகத்திற்கு மிக முக்கியக் காரணமாக இருந்த தொழில்நுட்ப மேன்மை குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது. அன்றைய முக்கியத் துறைமுகங்கள், வணிக நகரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி முதலியன குறித்தும், அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்கள், வணிகம், முதலியன குறித்தும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. வணிக வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றான நாணயங்கள் குறித்தும், தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுத் தரவுகள் குறித்தும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள வணிகம் குறித்தான தரவுகள் குறித்தும் இங்கு எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.
பழந்தமிழகக் கடல்வணிகம் குறித்த வெளிநாட்டு அறிஞர்களின் பல்வேறு குறிப்புகளும் விளக்கங்களும் இந்நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பழந்தமிழகத்தோடு வணிகத் தொடர்பும் அரசியல் தொடர்பும் கொண்டிருந்த தக்காண அரசுகள் குறித்தும், வட இந்திய அரசான மௌரியப் பேரரசின் எல்லைகள் குறித்தும் இந்நூலில் பேசப்பட்டுள்ளது. தமிழகத்தின் உலகளாவிய வணிகத்திற்குப் பேருதவியாக இருந்த வானியல் குறித்தும் இந்நூல் பேசுகிறது. பழந்தமிழகத்தின் உலகளாவிய வணிக வளர்ச்சிக்கு ஒரு காரணியாக இருந்துள்ள, பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு குறித்தும் இந்நூல் எடுத்துரைத்துள்ளது. மகதப்பேரரசுக்கும் தமிழக நகர அரசுகளுக்கும் இடையேயான ஒப்பீடும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
இறுதியாக, சங்ககாலகட்டத்தில் பழந்தமிழ்ச்சமூகம் பல்வேறு துறைகளிலும் பேரளவான வளர்ச்சியைப்பெற்று, உலகின் ஒரு முன்னணிச் சமூகமாக இருந்தது என்பதை இந்நூல் பலவகையிலும் உறுதி செய்கிறது.
Be the first to rate this book.