இன்று அறிவியல் வெகுவாக முன்னேறிவிட்டது. நாள்தோறும் புதுபுதுக் கண்டுபிடிப்புகளால் உலகம் நிரம்பி வழிகிறது. நமது பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் பல கருத்துகள் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளோடு வியக்கத்தக்க வகையில் ஒத்துப் போவதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
சூரியக் குடும்பத்தைப் பற்றி இன்றைய அறிவயில் கூறும் கருத்துகளை உறையூர் முதுகண்ணன் சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல், "வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்ற சிறுபாணாற்றுப் படை பாடல்கள் கூறியிருப்பது வியப்பூட்டுகிறது.
தாய்ப்பால் தருவதின் இன்றியமையாமையை இன்றைய அறிவியல் வலியுறுத்துகிறது. மருதன் இளநாகனாரின் கலித்தொகை பாடல், நல்லாதனாரின் திரிகடுகப் பாடல், கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெருப்பாணாற்றுப் படை பாடல், ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் என பல பாடல்களின் தாய்ப்பாலின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.
மன உணர்வுகள் தோலில் மாற்றங்களை ஏற்படுத்துவதை, மன அழுத்தம் நரைக்குக் காரணமாவதை இன்றைய அறிவியல் விளக்குகிறது. தலைவனைப் பிரிந்த தலைவியின் உடலில் பசலை படர்வதை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. பிசிராந்தையாரின் "யாண்டுபலவாக நரையில்லாமல் இருப்பதற்கான' காரணங்களைக் கூறும் புறநானூற்றுப் பாடலும் இன்றைய அறிவியல் கருத்துகளையே கூறுகிறது.
இவ்வாறு இந்நூல் முழுவதும் பல பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அறிவியல் கருத்துகளை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
(நன்றி: தினமணி)
Be the first to rate this book.