கணியன் பாலன் ஒரு பொறியாளர்; வரலாற்று ஆய்வாளர்; எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர். பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’
என்ற மிகச்சிறந்த வரலாற்று ஆய்வு நூலின் மூலம்
சங்ககாலச் சமூகத்தின் பெருஞ்சிறப்புமிக்கப் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியதோடு, அக்காலகட்டத்தையும் அதன் ஆட்சியாளர்களின் காலங்களையும், சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத் தரவுகள், வெளிநாட்டு,
உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்ற பல்வேறு சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தவர். சங்ககாலம் குறித்த வேறுபல தரவுகள் குறித்தும் இவரது ஆய்வு நூல் விரிவாகப் பேசியுள்ளது. இவ்வாய்வு நூலின் சுருக்கம் தான் ‘பழம்பெரும் தமிழ்ச் சமூகம்’ என்ற இந்நூல்.
இந்நூல் போக பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, சாதியின் தோற்றம், கேரள வரலாறு, தொல்கபிலர் – தமிழ் அறிவுமரபின் தந்தை போன்ற வேறு பல நூல்களையும் எழுதியவர். 1000 (கி.மு. 1000 – கி.பி.
250) ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் முன்னணிச் சமூகமாக இருந்த பழம்பெரும் தமிழ்ச்சமூகத்தின் பழஞ்சிறப்புகளை பல்வேறு பரிமாணங்களில் வெளிக்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வரலாற்றுப் பெருமிதங்களை உணர்ந்து, சாதி மதவேறுபாடுகளைக் கடந்து அனைவரும்
தமிழ் தேசத்தவராக ஒன்றிணைய வேண்டும் என்பதே இவரின் வேண்டுகோள். இந்நூலின் இறுதியில் இவரது நூல்களின் பட்டியல் உள்ளது.
கீழடி அகழாய்வுக்குப் பின், சங்ககாலம். அதன் ஆட்சியாளர்கள். புலவர்கள்.
ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.
2000 வருடங்களுக்கு முன்பே அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து. உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று. வணிக முதலாளித்துவத்திற்கான கூறுகள் பழந்தமிழகத்தில் உருவாகியிருந்தன எனவும், அதன் காரணமாக உலக நாடுகளோடு செய்துவந்த வணிகத்தில் கி.மு.600 – கி.பி.150 வரை. 750 வருடங்களாக பழந்தமிழகம் ஒரு மேன்மையான இடத்தில் இருந்து வந்ததோடு இதே காலகட்ட மகதப்பேரரசை விட பல துறைகளில் உயர் வளர்ச்சி பெற்ற சமூகமாகவும் இருந்து வந்தது எனவும் இந்நூல் உறுதி செய்துள்ளது.
கி.மு.800 முதல் கி.பி. 250 வரை, 1000 வருடங்களுக்கும் மேலாக பழந்தமிழ்ச் சமூகம் பல்வேறு துறைகளிலும் பெருவளர்ச்சி பெற்று, உலகின் பெருநகரங்களைக் கொண்டதாகவும், பேரளவான உற்பத்தியும் பெருஞ்செல்வமும் பெருவளமும் கொண்ட உலகின் ஒரு முன்னணிச் சமூகமாகவும் இருந்து வந்தது. இவை போன்ற பழந்தமிழ்ச் சமூகம் குறித்தப் பல்வேறு தரவுகளும் இந்நூலில் சான்றுகளுடன் வழங்கப்பட்டுள்ளன என்பதால் பழந்தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இந்நூல் வழங்கவல்லது
Be the first to rate this book.