பழம்பெரும் தமிழ்ச் சமூகம் குறித்த ஒரு முழுமையான கண்ணோட்டத்தை இந்நூல் சுருக்கமாக வழங்கவல்லது. கி.மு. 750 வாக்கில் எண்ணியம் என்கிற சாங்கியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர். போன்ற பல புதிய தரவுகள் பலவற்றை இந்நூல் கூறுகிறது.
2000 வருடங்களுக்கு முன்பே அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, உற்பத்தி பெருகி, சந்தை விரிவடைந்து, உலகளாவிய அளவில் வணிகம் நடைபெற்று, வணிகமுதலாளித்துவத்திற்கான கூறுகள் பழந்தமிழகத்தில் உருவாகியிருந்தன. அதன் காரணமாகத் தமிழ்ச் சமூகம் அன்றே தன்னை மொழியால் அடையாளப்படுத்திக்கொண்டது. ஆனால் இந்தியாவில் உள்ள 20க்கு மேற்பட்ட தேசிய இனச் சமூகங்களில் ஒன்றுகூட 400 ஆண்டுகளுக்கு முன்பு கூட தங்களை மொழியால் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை ஆகவே ஒப்பீட்டளவில் பழந்தமிழ்ச் சமூகம் மிக நீண்டகாலத்திற்கு முன்பே நன்கு முன்னேறிய சமூகமாக இருந்தது. பழந்தமிழ்ச் சமூகம் நகர அரசுகளைக் கொண்ட சமூகம். கிரேக்க நகர அரசுகளுக்கு இணையாக, சில விடயங்களில் அவற்றைவிட மேம்பட்டவையாக அவை இருந்தன. அக்காலகட்ட மகதப்பேரரசை விட பல்வேறு துறைகளில் உயர் வளர்ச்சியைப் பெற்ற சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்தது.
வேளாண்மை, பொருள் உற்பத்தி, தொழில்நுட்பம், வணிக மேலாண்மை போன்றவற்றில் உயர்நிலையில் இருந்ததாலும், தமிழரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்ததாலும் உலக நாடுகளோடு செய்துவந்த வணிகத்தில் கி.மு. 600 முதல் கி.பி. 150 வரை, 750 வருடங்களுக்கு மேலாக தமிழகம் ஒரு மேன்மையான நிலையைத் தக்க வைத்துகொண்டிருந்தது. சங்ககாலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை என்பதும் சங்ககால ஆட்சியாளர்களின் ஆண்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.
Be the first to rate this book.