கவிஞர் கண்ணதாசன் இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.
வெளிநாட்டுக்கு வரவேண்டு என்று அவருக்கு அழைப்பு வந்ததிலிருந்து தொடங்கி, உடன் யாரை அழைத்துச் செல்வது என்று முடிவெடுத்தது, விசாவுக்காக அலைந்து, விமானப் பயண அனுபவங்கள் எல்லாவற்றையும் எழுதியிருந்தாலும், எளிய நடையில் எழுதியிருப்பதால் படிக்கும்போது அலுப்பூட்டவில்லை.
யாழ்ப்பாணத் தமிழர்கள் மறந்து கூட ஓர் ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்தமாட்டார்கள். இலங்கையில் ஆசிரியரை படிப்பவர் என்று கூறுகிறார்கள், சீதை சிறையிருந்த குன்று இப்போதும் இலங்கையில் இருக்கிறது, கோடைககாலத்தில் அமெரிக்காவில் இரவு 9 மணிக்குத்தான் சூரியன் மறைகிறது என்பன போன்ற தகவல்கள் நூல் முழுவதும் உள்ளன. ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் எல்லைகாந்தி கான் அப்துல் கபார்கானை பார்க்க கவிஞர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்காமல் போனது நமக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவில் தொழிற்சாலைகளில் ஒவ்வோராண்டும் சிறப்பாக பணிபுரிந்த தொழிலாளர்களின் படங்களை மாட்டுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்நூலைப் படிக்கும்போது நாமே கவிஞருடன் இந்நாடுகளைச் சுற்றிப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
Be the first to rate this book.