பட்டியலினத்தவர் பற்றிய மக்கள் கணக்கெடுப்பு 1911-ல் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. பட்டியலில் உள்ள ஒவ்வொரு இனத்தைப் பற்றியும் மாவட்ட வாரியாகப் புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பட்டியல் இனத்தவர் பற்றிய நிலைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து கணிக்க இந்த புள்ளிகள் உறுதுணையாக இருக்கும். இப்புள்ளி விவரங்களில் சிலவற்றைப் பகுத்து தொகுத்து இந்த நூலில் தந்துள்ளோம்.
தமிழ்நாட்டில் 76 இனங்கள் பட்டியல் இனத்தில் (SC) இருப்பினும் பறையர், பள்ளர், அருந்ததியர் என்ற மூன்று பேரினங்களின் தொகுப்பில் மட்டும் 95 சதவிகிதப் பட்டியல் இன மக்கள் வருகின்றனர். இம்மூன்று பட்டியல் இனங்களின் கிளையாக இருக்கும் 22 இனங்கள் தவிர மீதி 54 பட்டியல் இனங்களின் மக்கள் தொகை 5 சதவிகிதத்திற்குள் அடங்கிவிடுகிறது.
பறையர் தொகுதி (உட்பிரிவுகள்-8) = 63.53%
பள்ளர் தொகுதி (உட்பிரிவுகள்-7) = 17.07%
அருந்ததியர் தொகுதி (உட்பிரிவுகள்-7) = 14.89%
பிறர் (உட்பிரிவுகள்-54) = 4.51%
2011-ல் 32 மாவட்டங்கள் இருந்தன. அவற்றுள் 16 மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர் மாநில சராசரியான 20.01 சதவிகிதத்தை விட அதிகமாக உள்ளனர். பஞ்சாயத்து சதவிகிதம் எப்படி உள்ளது என்ற தொகுப்பும் தரப்பட்டுள்ளது.
அரசியல் வியூகம் வகுக்கவும், பொருளாதாதாரம் கல்வி வளர்ச்சித் திட்டங்களை வகுக்கவும் இப்புள்ளிகள் உதவியாக இருக்கும். இம்மூன்று பேரின விகிதங்களின் ஒப்பீட்டை நோக்கினால் பறையரும், பள்ளரும் அவர்கள் விகிதத்திற்கு அதிகமாகவே ஒதுக்கீட்டுப் பலன்களை அடைந்திருப்பதை அறியலாம்.
வட மாவட்டங்களில் பறையர் மட்டுமே 80-90 சதவிகிதத்திற்கு மேல் வாழ்வதால், இப்மாவட்டப் பறையர்களுக்கு பள்ளர், அருந்ததியரோடு இணைந்து வாழும் வாழ்வியல் அனுபவம் குறைவாக இருப்பதையும் அறியலாம். இதனால் இவர்களிடம் பட்டியல் இனம் பற்றிய சிந்தனைகள் பெரும்பான்மையும் பறையர் வாழ்வியலைச் சார்ந்ததாகவே இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
பறையர்கள் தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் கணிசமாக பரவியுள்ளனர். பள்ளர்கள் தென் மாவட்டங்களில் கணிசமாகவும், வட மாவட்டங்களில் அருகியும் உள்ளனர். அருந்ததியர்கள் மேற்கு மாவட்டங்களில் கணிசமாகவும், அனைத்து மாவட்டங்களில் வெகு சிலராகவும் பரவியுள்ளனர்.
சமூகப் பினக்குகள் பறையருக்கும் வன்னியருக்கும் இடையேயானதாகவும், பள்ளர்க்கும் மறவர்க்கும் இடையேயானதாகவும், அருந்ததியர்க்கும் கவுண்டருக்கும் இடையேயானதாகவும் வியூகம் வகுத்துள்ளன. ஆங்காங்கு பல்வேறு பிற இனத்தவரால் வன்கொடுமைகள் தனிநபர்களால் இழைக்கப்பட்டாலும், இனத்தொகுப்புகளால் இழைக்கப்படும் வல்லந்தங்கள் இம்மூவகை வியூகத்திற்குள் அடங்கிவிடும். ஆகவே சமூக நல்லிணக்கத் தீர்வுகள் இந்த மூன்று சாதிகளை (வன்னியர், தேவர், கவண்டர்) நெறிப்படுத்துவதில் வென்றெடுக்கப்படும்.
பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டங்கள் கீழ்வரும் தொகுப்பாகப் பிரித்துச் செய்யப்பட வேண்டும்.
1) மலையாளி
2) இருளர்
3) ஊட்டி வாழ் அருகிவரும் 6 பழங்குடிகள்
4) ஈரோடு மலை வாழ் பழங்குடிகள்
5) வால்பாறை மழை வாழ் பழங்குடிகள்
6) பழங்குடிகள்
7) பளியர்
8) பிறர்
இந்நூலின் அடுத்த பதிப்புகளை வளப்படுத்தக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
இரா.கிருத்துதாசு காந்தி
முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்,
தமிழக அரசு.
Be the first to rate this book.