பட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா! ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கும் சொந்தக்காரர். போன தலைமுறையில், பட்டிமன்றம் என்றால் கல்லூரி மாணவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கலாம். ஆனால், இன்றைய தலைமுறையில் இதைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்தவர் பாப்பையா என்றால் அதில் மிகை இல்லை. தீபாவளி, பொங்கல் சமயங்களில் டி.வி. முன் அமர்ந்த பெரியவர்களுக்கு, பட்டிமன்றத் தமிழால் தன்னை அடையாளம் காட்டியது ஒரு பக்கம். ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மூலம் ஜனரஞ்சக உலகத்துக்கு ‘டினோசர்’ தெரிந்ததைப் போல, ‘சிவாஜி’ படத்தின் மூலம், ‘அங்கவை_சங்கவை’ சங்கதியை அவர் தெரிவித்து, சிறு குழந்தைகளுக்கும் தன்னை அடையாளம் காட்டியது ஒருபக்கம். ஆக, மதுரை மண்ணில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்து, இன்று ஒரு தமிழ் அறிஞராக, பேச்சாளர்களுக்கு வழிகாட்டியாக, நடிகராக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கிறார். இந்நூலில், தன் வாழ்க்கை வரலாற்றை மண்வாசனையோடு அள்ளித் தந்திருக்கிறார். இளவயது சம்பவங்களையும், தன் குடும்பத்தையும் உருக்கமாக விவரித்திருக்கிறார். பட்டிமன்றத்தின் வீச்சு, அது காலமாற்றத்துக்கு ஏற்றாற் போல வளர்ந்த விதம், அதனால் தான் வளர்ந்தது, வாழ்க்கை ஓட்டத்தின் சில சுகமான சம்பவங்கள், சில சங்கடமான அனுபவங்கள் என அனைத்தையும் மிகையில்லாமல், அதேசமயம் சுவை குன்றாமல் விவரித்திருக்கிறார். எவர் மனதையும் புண்படுத்தாமல், மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலை, மாணவர்கள், மேடைப் பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் படிக்கலாம்.
Be the first to rate this book.