கதாபாத்திரங்கள்தான் அமீனுடைய வலு என்று தோன்றுகிறது. எல்லாருமே நம்முடன் வாழ்கிற நம்மிடையே நடமாடுகிறவர்கள்தான். அவர்களுடைய எல்லா வலிகளையும் அமீன் நன்கு கவனித்திருக்கிறார். ஒரு கதை சொல்லியின் அடிப்படையான விஷயம் இதுதான். இந்தக் கவனிப்பை ஒரு அவதானிப்பாக மாற்றி அதைச் சிறப்பான “சொல்லல்” முறையில் தரும்போது அழகழகான கதைகளாக மாறி விடுகிறது. ஜெயகாந்தன், வண்ண நிலவன் ஆகியோருக்கு “விவிலிய பாஷை” (Bible Language) வாய்த்திருப்பது போல் அமீனின் கதைகளில் அருமையான “திருமறை நடை” (Quranic Language) யொன்று மிளிர்கிறது. ஆனால் அது வலிந்து செயல்படவில்லை, மிக இயல்பாக வருகிறது. அமீனின் பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். அவற்றில் ஒரு கூர்மையான தொனியிருக்கும். அதே தொனியை அவர் கதைகளிலும் பார்க்க முடிகிறது. அவரது இந்தக் கொஞ்சமான கதைகளின் களங்கள் மிகவும் பரந்து பட்டவையாக உள்ளது ஒரு சிறப்பு. இது அவரது பார்வை விசாலத்தை, அது தான் வாழும் சமுதாயம் பற்றி மட்டுமே இயங்காமல் பல்வேறு சமுதாயத் தளங்களிலும் பயணம் செய்கிறது- காட்டுகிறது.
- கலாப்ரியா
எதிர்ப்புகளைக்கண்டு அஞ்சாமல் சமுதாயத்தில் காணப்படும் சுரண்டல்களையும்,சீர்கேடுகளையும் துணிச்சலோடு இலக்கியத்தில் பதிவு செய்த படைப்பாளிகளின் வரிசையில் வருகிறார் வி.எஸ். முஹம்மது அமீன். அவரோடு நடத்திய உரையாடல்களிலிருந்து அவருக்கென்று ஓர் இலக்கியப் பார்வையும், முற்போக்கான சிந்தனையும் உடையவர் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சமூக பிரச்னைகளைத் கூர்ந்து உள்வாங்கி அதை வெளிப் படுத்தும் ஆற்றல் படைத்தவர் முஹம்மது அமீன் என்பதற்கு இத் தொகுப்பு சான்றாக உள்ளது. வாசிப்பதற்குச் சலிப்புத் தட்டாத உயிரோட்டமான கதைகள்.
- தோப்பில் முஹம்மது மீரான்
Be the first to rate this book.