1990களின் நடுப்பகுதியில் 'காலச்சுவடு' பதிப்பகத்தைத் தொடங்கித் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றாக அதை வளர்த்தெடுத்துள்ள கண்ணன் பதிப்பு, பதிப்பகம், காப்புரிமை, இலக்கியம் சார்ந்த அயலுறவு முதலான பொருள்கள் குறித்துப் பல்வேறு தருணங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தமிழ்ப் பதிப்புலகம் குறித்துத் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறையுடன் காத்திரமான கருத்துக்களை முன்வைத்துவரும் கண்ணனின் இந்த நூல், தமிழ்ப் பதிப்புலகின் தன்மைகளையும் தேவைகளையும் சர்வதேசப் பின்புலத்தில் வைத்து அலசுகிறது. தமிழ்ப் பதிப்புலகின் இன்றைய நிலை குறித்தும் அதன் அடுத்த கட்டப் பயணம் குறித்தும் தீர்க்கமான பார்வைகளை முன்வைக்கிறது. இந்திய அளவிலும் உலக அளவிலும் தன் செயல்பாடுகளை விரித்துக்கொண்டு செல்லும் காலச்சுவடு பதிப்பகத்தின் பயணம் எப்படிச் சாத்தியப்பட்டது என்பதைக் காட்டும் தடங்களும் இந்நூலில் இருக்கின்றன. தமிழ்ப் பதிப்புலகம் குறித்து கண்ணன் தொடர்ந்து முன்வைத்துவரும் பல்வேறு கனவுகள் நனவாகத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்த நூல் வெளியாவது மிகவும் பொருத்தமானது.
Be the first to rate this book.