நான் என்னுடைய பன்னிரண்டாவது புத்தகத்தை என்னுடைய நாற்பத்திரண்டாவது வயதில் வெளியிடுவேன் என்று யாரேனும் பத்து வருடங்களுக்கு முன்னால் கூறியிருப்பார்களேயானால், "என்னைய பரியாசம் அடிக்கியா கோயிமோன?" என்பது போன்ற தேன் தடவிய வார்த்தைகளால் தடவி சிறப்பு செய்யப்பட்டிருப்பார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தின் கணக்கை யார் கணிப்பது? ‘தேமே’ என்று கேமராவும் கையுமாய் சுற்றித் திரிந்த ஒரு தொட்டியைத் தன் கரங்களுக்குள் இடுக்கிக்கொண்டு, என் கிறுக்கல்களையெல்லாம் உங்களை வாசிக்க வைத்துத் துன்புறுத்தும் இலக்கிய மாதாவை என்ன செய்து விட முடியும்? விதி என்பது வித்யா பாலனின் கண்களை விட ஆழமானது நண்பர்களே..
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளும் நானும் என்னுடைய கோம்பை சகாக்களும் வளர்ந்து, வாழ்ந்து, உருண்டு, ஊடுருவி, தாவி, மண்டையில் உடைப்பெடுத்து, பெகளம் வைத்து, எத்துவாளித்தனங்கள் எய்தி, குத்துகள் வாங்கி இன்று வரை ஜீவித்திருக்கும் குமரி மண்ணின் மைந்தர்களின் கதைகளே. நாம் தினமும் சந்திக்கும் நம்முடன் வாழும் சில சள்ள டாவுகளின் களேபரக் கதைகளும், சில நல்மனம் கொண்ட மனிதர்களின் நன்னெறிக் கதைகளும் இதில் அடக்கம். கில்லர் பில்பாஜி, கிறுக்குக் கிறுதண்டம், கிணுக்கு, பச்சத்தண்ணி ஜான் போன்ற கதாநாயக மற்றும் வில்ல பிம்பங்களுக்குள் பொருந்தாத ஆனால் அதற்கான அனைத்து அம்சங்களும் உடைய கதாபாத்திரங்கள் உங்களுக்கு அருகிலும் உலவிக் கொண்டிருக்கலாம். என்னைப் போலவே உங்கள் வாழ்க்கையிலும் அவர்கள் தாக்கத்தையோ தாக்குதலையோ ஏற்படுத்தியிருக்கலாம். நேரடியாக பதில் தாக்குதல் நிகழ்த்தவியலாத சூழ்நிலைகளும் தமிழில் டைப்பத் தெரிந்த ஒரு கணிப்பொறியும் இத்தகைய புத்தகங்கள் பிறக்கக் காரணமாகின்றன.
பி.கு: புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் 18+ கதைகளை எதிர்பார்த்து கடைவாயில் அமுதொழுக வாங்கும் பிரகஸ்பதிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எல்லாம் வல்ல இப்பிரபஞ்சம் அனைவருக்கும் அன்பையே அருளட்டும்.
இப்படிக்கு,
விருதுகளை கௌரவிக்க காத்திருக்கும் மேற்படி நூலின் ஆசிரியர்
Be the first to rate this book.