கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. உன் ஆக்கினைகளை அகற்று. திறந்த உடலைக் களிப்பாக்கு.’
***
இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும். பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல். பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது. இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘சமநிலையை’ பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள்.
சோ. தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார்.
கருத்தமுத்து ஒரு ஆணாக, குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது. நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான். ஒன்று கல்வி, இன்னொன்று மதம், இணையாகவே காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான். இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான்.
ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது.
- ஜெயமோகன்
1 Worst
Only for right wing person
Raja 24-09-2020 09:11 pm