'பருத்திப்பால் பாட்டி' தொகுப்பில் இருக்கும் இருபது கதைகளும் கிராமத்து மக்களின் விழுமியங்கள் சார்ந்த பொருண்மைகளில் பெரிதும் கவனம் குவிக்கின்றன. அவர்களின் நம்பிக்கைகளாலும் வாழ்க்கை குறித்த எண்ணங்களாலும் கட்டமைக்கப்படும் வாழ்க்கையின் அன்றாடங்களின் அவதானங்கள் இந்தக் கதைகள்.
இந்தக் கதையில் வரும் பூவாயி பாட்டி, கருப்பாயி பாட்டி, ராசாத்தி பாட்டி, காவல்காசு பாட்டி, கருப்பசாமி, செல்லாண்டி, பக்கீர், ரப்பாணி ராவுத்தர், போர் விஜயன், ... .... இப்படிப் பலரையும் சாதாரண நகர்ப்புற வாழ்க்கையில் சந்திக்க முடியாது. நகரத்தில் பெருந்தாக்குதலுக்கு உள்ளானாலும் நான் நானாகத்தான் இருப்பேன் என இன்றும் வாழும் கடந்த தலைமுறையின் மனிதர்கள் இவர்கள். கதைகளுக்குள் வரும் இன்றைய தலைமுறை இளைஞர்களை நாம் தினம் தினம் சந்திக்கலாம். இரண்டிற்குமான இடம் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. என்றாலும் அந்த வெள்ளந்தியான மனிதர்கள்தான் கதைகளின் மையமாக நிற்கிறார்கள். கதையில் வரும் பாத்திரங்கள் மட்டுமல்ல; இந்தக் கதைகளும் வெள்ளந்தியான கதைகள்தான்; எந்தவிதமான அலங்காரமும் இல்லாமல், எந்த இசத்துக்குள்ளும் சிக்காமல், எளிமையாக, மிக எளிமையாக இயற்கை அழகுடன் வசீகரிக்கும் கிராமத்துக் குழந்தையின் வசீகரம் இந்தக் கதைகளில் இருக்கிறது. இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
Be the first to rate this book.