சிறை உங்கள் மனத்தில் இருக்கிறது! அதற்கான திறவுகோல் உங்கள் கையில் இருக்கிறது!!
இறுதியில், நமக்கு என்ன நிகழ்கிறது என்பது முக்கியமல்ல - அதைக் கொண்டு நாம் என்ன செய்யத் தீர்மானிக்கிறோம் என்பதுதான் முக்கியம். வருத்தம், இழப்பு, பயம், கவலை, தோல்வி, மனச்சோர்வு போன்ற துன்பங்களை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம். ஆனால் கூடவே, தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமும் நமக்கு இருக்கிறது. ஒன்று, நாம் ஒரு துன்பத்தை எதிர்கொள்ளும்போது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து நம்முடைய முயற்சியைக் கைவிட்டுவிடலாம்; அல்லது ஒவ்வொரு கணமும் நமக்குக் கிடைத்துள்ள ஒரு பரிசு என்பதுபோல நாம் வாழலாம்.
நம்மைச் சிறைப்படுத்துகின்ற எண்ணங்களையும் நம்மை இழுத்துப் பிடித்து வைத்திருக்கின்ற அழிவுபூர்வமான நடத்தைகளையும் மாற்றுவதற்கு உதவக்கூடிய, நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய ஒரு கையேட்டை, பிரபல உளவியலாளரும் நாஜி வதை முகாமிலிருந்து தப்பிப் பிழைத்தவருமான ஈடித் எகர் நமக்கு வழங்குகிறார். தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் தன்னிடம் சிகிச்சை பெற்றுள்ளவர்களுடைய வாழ்க்கையிலும் நடைபெற்றச் சம்பவங்களை அவர் இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். உங்கள் வாழ்க்கையின் மிக இருண்ட கணங்கள்தாம் உங்களுடைய மாபெரும் ஆசான்கள் என்பதை நீங்கள் கண்டு கொள்ளவும், உங்களுக்குள் இருக்கின்ற உள்ளார்ந்த வலிமையின் வாயிலாக சுதந்திரத்தை அடையவும் அவருடைய பாடங்கள் உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.
டாக்டர் ஈடித் எகர் ஒரு பிரபல உளவியலாளர். நாஜி வதை முகாம்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரான அவர், அமெரிக்க இராணுவத்தினர், போர்களில் கலந்து கொண்டு சண்டையிட்டுத் திரும்பியவர்கள், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயமுற்றவர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார், அவர்களுக்குச் சிகிச்சை அளித்துள்ளார். அவர் கலிபோர்னியாவிலுள்ள லா ஹோயா என்ற நகரத்தில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.