ஜான் சுந்தர் கதைகளை வாசிக்கும்போது புலப்படும் முதன்மையான அம்சம் இவற்றில் உள்ளோடும் வெகுளித்தன்மை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை களங்கமற்ற விழிகளால் காணும் ‘அப்புராணி’ப் பார்வை. இந்த வெகுளித்தனம் கலைகிற நொடியில், அப்பாவிப் பார்வை கூர்ந்தகவனமாக மாறுகிற இடத்தில் நடப்புகள் கதைகளாக உருவம் கொள்கின்றன. இந்த இயல்பு காரணமாகவே கதைகள் புத்துணர்வளிப்பவை ஆகின்றன.
எளிய மனிதர்கள், எளிய உலகம், எளிய சம்பவங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கும் எதிர்பாராத நிகழ்ச்சிகளை, அதிர்ச்சியடைய வைக்கும் நிஜங்களை இந்தக் கதைகள் துலங்கச்செய்கின்றன. மற்றும் பலராக இருப்பவர் வாழ்வில் வெளித்தெரியாத மற்ற பலதையும் பகிரங்கமாக்குகின்றன.
சங்கடத் தருணங்களை நகை ஒளிரும் இழையில் கோர்க்கும் திறனை ஜான் சுந்தர் இந்தக் கதைகளில் இயல்பாக, எளிமையாக, புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார். புன்னகைக்கும் கண்ணீருடன் காலணியைத் திண்பண்டமாகச் சித்திரித்துக் காட்டும் ‘காரியக் கோமாளி’யின் கலைச் சாயல் ஜான் சுந்தரின் கைவரிசையில் மிளிர்கிறது.
Be the first to rate this book.