இலங்கையில் பிரித்தானியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பி, தேயிலை, இரப்பர், தென்னைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக 1820களில் அன்றைய மதராஸ் பிரசிடென்சியிலிருந்து (இன்றைய தமிழகம்) அரை அடிமைகளாக இந்தியத் தமிழர்கள் கொண்டுவரப்பட்டனர். இதற்காக கட்டுமரத்திலும் சிறு படகுகளிலும் இலங்கைத் தீவினை நோக்கி பயணம் செய்வதர்களில் பலர் கடலுக்கு பலியாகினர். உயிர் தப்பி கரையேறியவர்களில், மன்னாரிலிருந்து கண்டி நோக்கிய அடர்ந்த காடுகள் வழியான நடைப்பயணத்தில் சிலர் மலேரியா நோய்க்கும் சிலர் காட்டு மிருகங்களுக்கும் இரையாகினர். எஞ்சிய சிலரே மலைப் பிரதேசங்களை வந்தடைந்தனர். இவ்வாறு எஞ்சியோர், வழியில் தாம் அடைந்த துயரங்களை, இழப்புகளை, ஏமாற்றங்களை வாய்மொழி பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு கூறிச் சென்றனர். அவர்கள் அதனை தமக்கடுத்த தலைமுறைக்கும் வாய்மொழிப் பாடலாகவே வழங்கினர். இவ்வாறு தலைமுறைகள் வழி பரிமாறிக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சம்பவங்களையும் துயரங்களையும் போராட்டங்களையும் ஐம்பதுகளில் பாவலர்கள் பதியும் முயற்சியில் ஈடுபட்டனர். தம் முன்னோரின் வாய்மொழி வரலாற்றை அச்சுப்பிரதியாக கொண்டு வந்தனர். இதில், தம் மூதாதையர்களிடம் பெற்ற வரலாற்று வாய்மொழிப் பாடல்களுடன் தம்காலத்தில் நடைபெற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்களுக்கிடையிலான போராட்டங்களையும் ஆணாதிக்கம், மது பழக்கம், குடியுரிமை ஆகியவைப் பற்றியும் பதிவு செய்துள்ளனர். இம்முயற்சியே மலையக மக்களது முதல் மக்கள் ஆவணமாகும். இந்த அச்சுப் பிரதிகளின் தொகுப்பே இந்நூல். இலங்கைக்கு முதன்முதலாக வந்த அன்றைய மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்புலத்தையும் அனுபவித்த துயரங்களையும் இத்தொகுப்பு மூலம் அறியலாம்.
Be the first to rate this book.