நமது வாழ்வையும் வாழ்வு முறையையும் அக, புறக் காரணிகள் கணந்தோறும் தூண்டி வருகின்றன. நாம் ஒதுங்க நினைத்தாலும் அவை நம்மை விடுவதில்லை. இந்த வாழ்க்கை அரசியலைப் பண்பாட்டுத் தளத்தில் நின்று பேசுகின்றது இந்த நூல்.
சமூக உரையாடல், பெண்நிலை உரையாடல், இலக்கிய உரையாடல் ஆகிய மூன்றும் இங்குப் பேசுபொருளாகின்றன. அம்பேத்கரின் சாதியம், உலக மானிடவியல் அறிஞர்களின் கோட்பாடுகளோடு முதல் முறையாக விவாதிக்கப்படுகிறது. பிராமணர் தோற்றம் பற்றிய ஒரு புதிய வாசிப்பு, முதல்முறையாக இந்த நூலில் இடம்பெறுகிறது. வட இந்தியத் தொல்குடி
ஒன்றின் சமூக உரையாடல் சாதியத்தின் ஒரு பெரும் புதிரை விடுவிக்கின்றது. கலப்புமணங்கள், இந்து-முஸ்லிம் ஓர்மை சார்ந்த உரையாடல்கள் மானிடவியல் வீச்சுடன் விவாதிக்கப்படுகின்றன.
ஆதியில் பெண் சுயாட்சியும் காலப்போக்கில் அது தேய்ந்துவரும் போக்குகளும் இனவரைவியல் நோக்கில் இந்த நூலில் காட்சிப் படுத்தப்படுகின்றன.
இலக்கிய உரையாடலே நம் வாழ்வைக் கலாபூர்வமாக்குகிறது. இந்த நூலில் வட்டார நாவல்களை ‘சுதேசி இனவரைவியல்’ என்கிறார் பக்தவத்சல பாரதி. இதற்காக கி. ராவின் படைப்புகளை முன்வைத்து வட்டார நாவல்கள் பற்றிப் பேசும் களங்கள் நமக்குப் புதியவை. படைப்பாளிகளைத் தாண்டி இன்னொரு தளத்தில் கலைகளும் கலைஞர்களும் முன்னெடுக்கும் பண்பாட்டு உரையாடல்கள் இனவரைவியல் நுட்பங்களுடன் நமக்குப் புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.
Be the first to rate this book.