பன்மைச் சமூகங்கள் பற்றிய விவாதம் இன்று நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மும்முரமாக நடந்துவருகின்ற நிலையில் பன்மைச் சமூகத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியதென்னவென்பது குறித்து நூலாசிரியர் பதிவு செய்துள்ள பரிந்துரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
குறிப்பாக சமூகச் செயல்பாடுகளில் மும்முரமாகப் பங்கேற்பதன் (Social Engagement) மூலமாகத்தான் சிறப்பான முறையில் அழைப்புப் பணியாற்ற முடியும் என்கிற ஆணித்தரமான கருத்தும் ‘சமகால சமூக அவலங்களைக் களைவதற்காக யாதொரு முன்னெடுப்பும் செய்யாமல் அன்றாட வாழ்விலிருந்து தம்மைத் துண்டித்துக்கொண்டு வெறுமனே போதகராக தேங்கி நின்றுவிடக் கூடாது' என்கிற அழகிய அறிவுறுத்தலும் அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் எந்நேரமும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய முத்தான கருத்துகளாகும்.
முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப்படாத வரையில் பன்மைச் சமூகத்தில் இஸ்லாமிய தாக்கங்களை ஏற்படுத்துகின்ற எந்தவொரு செயல் உத்தியும் முழுமையடை-யாது என்கிற நூலாசிரியரின் கருத்து இன்றையக் காலத்தில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மொத்தத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது என்பதற்கேற்ப பன்மைச் சமூகம் தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் அழகாக, நிறைவாக, நேர்த்தியாக சிந்தனையைத் தூண்டுகின்ற விதத்தில் தொகுத்துத் தந்திருக்கின்றார் நூலாசிரியர்.
களத்தில் இருக்கின்ற அழைப்பாளர்கள் மட்டுமின்றி சமுதாயத் தலைவர்கள், ஆலிம்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், குடும்பத் தலைவிகள் என எல்லாத் தரப்பினரும் வாசிக்க வேண்டிய அழகிய நூல்தான் இந்நூல்.
Be the first to rate this book.